ஆப்கானிஸ்தானில் கடுமையான போர்... முக்கிய நகரங்களை கைப்பற்ற தாலிபன்கள் தீவிரம்

ஆப்கானிஸ்தானில் கடுமையான போர்

ஹேல்மண்டடில் உள்ள 11 வானொலி நிலையங்களை தாலிபன் கைப்பற்றி விட்டதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரங்களை கைப்பற்ற தாலிபன்கள் கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க படைகளை திடீரென வாபஸ் பெற்றதே சிக்கலுக்கு காரணம் என அதிபர் அஷ்ரப் கனி குற்றம்சாட்டியுள்ளார்.

  ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ள தாலிபன் பயங்கரவாத அமைப்பு, ஆப்கான்ஸதான் ராணுவத்துடன் போரிட்டு முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது.

  தெற்கு ஹேல்மண்ட் மாகாணத்தில் உள்ள லஷ்கர் கா (Lashkar Gah) நகரை கைப்பற்ற கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள தொலைக்காட்சி நிலையம் தாலிபன்கள் வசம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

  அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகளின் மையமான ஹேல்மண்ட் மாகாணம் தாலிபன்கள் வசம் சென்றிருப்பது, ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அமெரிக்க படைகளை திடீரென வாபஸ் பெற்றதே உள்நாட்டு போர் தீவிரமடைய காரணம் என அதிபர் அஷ்ரப் கனி குற்றம்சாட்டியுள்ளார். முக்கிய நகரங்களை அரசின் வசம் வைத்துக்கொள்வதே தற்போதைக்கு முக்கிய குறிக்கோள் என்றும் அதிபர் கூறியுள்ளார்.

  ஹேல்மண்டடில் உள்ள 11 வானொலி நிலையங்களை தாலிபன் கைப்பற்றி விட்டதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது பெரிய நகரமான கந்தகாரிலும் இரு தரப்பினருக்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது.

  தாலிபன்களின் வெற்றி சர்வதேச அளவிலான பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் என சர்வதேச நாடுகள் எச்சரித்துள்ளன. அதிகரிக்கும் வன்முறையை தொடர்ந்து, அமெரிக்க படைகளுக்கு உதவியாக இருந்த மேலும் ஆயிரம் பேரை தன் நாட்டிற்கு அழைத்துக்கொள்ள பைடன் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஸ்பின் போல்டாக்கில் பொதுமக்களை தாலிபன்கள் கொன்று குவித்து போர் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: