ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜனநாயக ஆட்சி முடிவுக்கு வந்து, தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை நாடு திரும்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதை அடுத்து, ஆப்கானிஸ்தானை தாலிபான் சில நாள்களிலேயே கைப்பற்றினர்.
இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் எழுந்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் புள்ளி விவரப்படி, உலகிலேயே அதிகளவிலான உணவு பாதுகாப்பின்மை ஆப்கானிஸ்தானில் நிலவுகிறது. அந்நாட்டில் 2.3 கோடி பேர் உணவின்றி தவிப்பதாகவும், சுமார் 95 சதவீத மக்களுக்கு உரிய விதத்தில் உணவு கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இத்துடன் பாலின சமத்துவத்திற்கு எதிரான பல நடவடிக்கையை தாலிபான் அரசு மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தடை என தாலிபான் அரசு உத்தரவிட்டது. இதற்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டம் தெரிவித்தனர். இதையடுத்து, தாலிபான் தலைவர் அளித்த விளக்கத்தில், நாட்டில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, தற்காலிகமாக தடை விதித்துள்ளோம். நிலைமை சீரானதும் மீண்டும் பெண்கள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்கலாம் என அறிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்நாட்டில் பெண்களுக்கு வானக ஓட்டும் உரிமம் தற்போது வழங்கப்படுவதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:
ட்விட்டர் பயன்படுத்த கட்டணம்: எலான் மஸ்க் ட்விட்டால் பயனர்கள் அதிர்ச்சி
சில மாதங்களுக்கு முன் அந்நாட்டின் நகரங்களில் பெண்கள் வாகனங்கள் ஓட்டிவந்த நிலையில், அரிதாகவே பெண்கள் சாலைகளில் வாகனங்களுடன் தென்படுகின்றனர். தலைநகர் காபூல் மற்றும் ஏனைய பிராந்தியங்களில் தாலிபான் அரசு லைசென்ஸ் வழங்குவதை நிறுத்தியதே இதற்கு காரணம் என ஊடகத் தகவல் தெரிவிக்கின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.