ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டினரை மீட்கும் கடைசி கட்ட நடவடிக்கையில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக இருக்கும் நிலையில், எங்களையும் அழைத்துச் செல்லுங்கள் என பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்தில் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.....
காபூல் விமான நிலையத்தின் வாயிலில் ஆப்கானிஸ்தான் மக்களை விரட்டியடிக்க வானத்தை நோக்கி எந்நேரமும் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்க ராணுவ வீரர்கள். தாலிபான்களின் கையில் சிக்கிய ஆப்கானிஸ்தானில் மக்கள் ஒவ்வொரு நிமிடமும் அச்சத்திலேயே இருக்கிறார்கள்...
சொந்த நாட்டை விட்டு ஓடிப்போய் விட முடியாதா என காபூல் விமானநிலையத்தின் வாயிலில் இரவும் பகலும் காத்துக் கிடக்கிறார்கள். கைக்குழந்தையை ராணுவ வீரர்களிடம் கொடுத்து விமான நிலையத்திற்குள் செல்ல முயற்சித்த அந்த காட்சி காண்போருக்கு கண்ணீரை வரவழைக்கும்...
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க மீட்பு விமானங்கள் வந்திறங்கும் பகுதி மட்டுமே அமெரிக்க ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரதான நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில், தாலிபான்களே துப்பாக்கியோடு நிற்கிறார்கள். குடிமக்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம் என அவர்கள் அறிவித்த போதும் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவதால் ரப்பர் பைப்புகளைக் கொண்டு அவர்களை அடித்து விரட்டுகிறார்கள், தாலிபான்கள்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி நாடுகள் தற்போது அவர்களது நாட்டினரையும், அவர்களுக்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தானியர்களையும் மட்டுமே மீட்டு அழைத்துச் செல்கின்றன. ஆனால் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாத சாமானிய மக்களும் உயிர் பயத்தில் தங்களையும் அழைத்துச் சென்றுவிடுமாறு குடும்பத்தோடு கதறிக் கொண்டிருக்கின்றனர்.
எவ்வளவு கெஞ்சினாலும் வெளிநாட்டினருக்கு உதவியவர்களுக்கு மட்டுமே விமானத்தின் கதவுகள் திறக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடந்த இரு நாட்களில் 2 ஆயிரம் பேரை மீட்டுள்ள அமெரிக்கா வரும் 31ம் தேதிக்குள் இன்னும் 6 ஆயிரம் பேரை மீட்கத் திட்டமிட்டுள்ளது. அதற்குள் தப்பிச் சென்று விடுவதற்காக தாலிபான்கள் விரட்டியடித்தாலும் விமான நிலையத்தின் முன்பாக தவமாய் தவமிருக்கிறார்கள் மக்கள். இருபது ஆண்டுக்கு முந்தைய தாலிபான்களின் கொடுங்கோலாட்சி கண்கள் முன்னால் விரிய காபூல் விமான நிலையத்தை தப்பி ஓடும் வழியாகத்தான் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.