ஆப்கானிஸ்தான் - இந்தியா இடையேயான பயணிகள் விமான சேவைக்கு அனுமதி வழங்குமாறு இந்தியாவின் பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு தாலிபான் அரசு கடிதம் எழுதியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசில் இருந்து தங்களுக்கு கடிதம் வந்துள்ளதை இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார் ஒப்புக்கொண்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இது கொள்கை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் விமான போக்குவரத்து அமைச்சகம் இது தொடர்பான முடிவை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தற்காலிக விமான போக்குவரத்து அமைச்சராக உள்ள அல்ஹாஜ் ஹமீதுல்லா அகுந்த்ஸடா இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளபடி இரு நாடுகளுக்கும் இடையே பயணிகள் விமான போக்குவரத்து சுமூகமாக இருக்க வேண்டும் என்பதே இந்த கடிதம் எழுதப்படுவதன் நோக்கம்.
எங்கள் தேசிய விமான நிறுவனங்கள் (அரியானா ஆப்கான் ஏர்லைன் மற்றும் காம் ஏர்) தங்கள் திட்டமிடப்பட்ட விமான சேவையை தொடங்க ஆயத்தமாக உள்ளன. எனவே, பயணிகள் விமான சேவையை தொடரும்படி ஆப்கானிஸ்தான் பயணிகள் விமான இயக்குநரகம் கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன்பு இந்தியாவின் டெல்லியில் இருந்து ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் இந்தியா ஆகிய விமானங்கள் மட்டும் அந்நாட்டு தலைநகர் காபூலுக்கு இயக்கப்பட்டு வந்தன.
மேலும் படிக்க: நபிகள் நாயகம் குறித்து கருத்து: பெண் தலைமையாசிரியருக்கு மரண தண்டனை!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் தாலிபான்களின் கை ஓங்கியது. ஒவ்வொரு மாகாணமாக கைப்பற்றி வந்த தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று தலைநகர் காபுலை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து, அந்நாட்டுடனான பயணிகள் விமான சேவையை அனைத்து நாடுகளும் ரத்து செய்தன. அங்கிருந்த தங்கள் நாட்டு மக்களை மீட்க மட்டும் சிறப்பு விமானங்களை பிற நாடுகள் அனுப்பின.
இதையும் படிங்க: உலகின் விலைமதிப்பான மரம் இது தான்.. ஒரு கிலோ மரக்கட்டையின் விலை ரூ. 73,000
பின்னர், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. இதை தொடர்ந்து செப்டம்பர் 13ம் தேதி இஸ்லாமாபாத் மற்றும் காபூல் இடையே சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கியது. தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு மட்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.