2021 இல் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் கைப்பற்றியதில் இருந்து அந்த நாட்டில் இருந்து வரும் செய்திகள் எல்லாம் உலகை ஒரு பரபரப்பான சூழலுக்கே தள்ளி வருகிறது. தலிபான் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆண், பெண்களுக்கு என்று தனி வகுப்பறைகள் அமைக்கப்பட்டது. பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும். பெண்கள் இடைநிலைக் கல்வியில் சேர தடை விதித்த உலகின் ஒரே நாடு ஆப்கானிஸ்தான். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உயர்கல்வி, வேலை மற்றும் சேவைகளுக்கான அணுகல் மறுக்கப்பட்டது.
மேலும் பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும் பொது வாழ்வில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆண்கள் துணையோடு தான் செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது விவாகரத்து செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான் பெண்களை துஷ்பிரயோகம் செய்த கணவர்களிடம் திரும்ப செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
தாலிபானுக்கு முந்தைய அமெரிக்க ஆதரவுடைய அரசாங்கத்தின் கீழ், நகர்ப்புறங்களில் விவாகரத்து விகிதம் படிப்படியாக அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. விவாகரத்து வழக்குகளை விசாரிக்க பெண் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களைக் கொண்ட சிறப்பு குடும்ப நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. ஆனால் தலிபான் வந்ததும் பெண் நீதிபதிகளை மொத்தமாக நீக்கிவிட்டு ஆண்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வன்கொடுமை காரணங்களுக்காக விவாகரத்து பெற்று வெளியேறிய பெண்களை அதே கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தலிபான் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. பல வருடங்களாக கணவரிடம் அடி வாங்கி வந்த பெண் ஒருவர், தனது ஆறு மகள்கள் மற்றும் இரண்டு மகன்களுடன் கணவன் வீட்டை விட்டு தப்பித்து பெயர்களை மாற்றி வேறொரு ஊரில் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் இப்போது அதே கணவருடன் சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தப்படுகிறார்.
வன்கொடுமை செய்த கணவருடன் வலுக்கட்டாயமாக சேர்ந்து வாழ சொல்வதை எதிர்த்து சில பெண்கள் நீதிமன்றத்திதை அணுகி வருகிறார்கள். ஆனால் "எங்களுக்கு இதுபோன்ற புகார்கள் வந்தால், நாங்கள் ஷரியாவின்படி அவற்றை விசாரிப்போம். இதுபோன்ற வழக்குகளின் அறிக்கைகளை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்." என்று தலிபான் உச்ச நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் இனாயத்துல்லா கூறினார்.
ஏற்கனவே, ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் மகளிர் விவகார அமைச்சகம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை சிதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முந்தைய அரசாங்கத்தில் வழங்கப்பட்ட விவாகரத்துகளை தலிபான் ஆட்சி ஒப்புக்கொள்ளுமா என்று கேட்டதற்கு, செய்தித் தொடர்பாளர் அதை ஒரு 'சிக்கலான விஷயம்' என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமை மறுக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Taliban