2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் முற்றாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. இதையடுத்து, அங்கிருந்த ஜனநாயக ஆட்சி கவிழ்ந்து தாலிபான் ஆட்சி அமலுக்கு வந்தது. இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான அடக்குமுறை சட்டங்களை பின்பற்றி பாலின சமத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது.
மேலும், குற்றங்களுக்கு மிக கொடூரமான தண்டனைகளை தாலிபான் அரசு வழங்குவதற்கும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், குற்றவாளிகளுக்கு பொது வெளியில் கசையடி கொடுக்கும் தண்டனையை தலிபான்கள் மீண்டும் அமல்படுத்தினர்.
இது சர்வதேச அமைப்புகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தாலிபான் அரசு அந்நாட்டில் கொலை செய்த ஒருவருக்கு பொது வெளியில் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. அந்நாட்டின் மேற்கு பாரா பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு நபர் மற்றொரு நபரை தகராறு காரணமாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த வழக்கை அந்நாட்டு மத குருமார்கள் விசாரித்து பொதுவெளியில் மரண தண்டனை தர வேண்டும் என தீர்ப்பளித்தனர். அதன் அடிப்படையில் அந்த நபருக்கு அந்நாட்டின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பொதுவெளியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சிராஜுத்தின் ஹக்கானி, துணை பிரதமர் அப்துல் கானி பராதார் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, கல்வி அமைச்சர் ஆகியோர் இதில் பங்கேற்றனர். 1996-2001ஆம் ஆண்டு தாலிபானின் முதல் ஆட்சியில் இது போன்ற கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க படைகளால் தாலிபான் ஆட்சி அகற்றப்பட்டது.
இதையும் படிங்க: ஹிஜாப் அணியாத பெண் வீராங்கனை.. வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய ஈரான்.. பகீர் சம்பவம்!
தற்போது தாலிபான் ஆட்சி மீண்டும் வந்துள்ளது. எனவே, ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை முழுமையாக கறாராக அமல்படுத்த வேண்டும் என அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் ஹிபாத்துல்லா அகுன்சதா உத்தரவிட்டுள்ளார். எனவே, அங்கு இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Taliban