• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • நெருப்போட விளையாடினா பொசுங்கிடுவீங்க: ஜோ பைடனிடம் சீறிய சீன அதிபர் ஜின்பிங்

நெருப்போட விளையாடினா பொசுங்கிடுவீங்க: ஜோ பைடனிடம் சீறிய சீன அதிபர் ஜின்பிங்

  • Share this:
    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் தைவான் பற்றிய பேச்சு எழுந்த போது ஜின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் சீற்றத்தை வெளிப்படுத்தியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஜோ பைடன் - ஷி ஜின்பிங் இடையேயான பேச்சின் போது மனித உரிமை, வர்த்தகம், தைவான், இந்தோ - பசிபிக் உட்பட பல பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டாலும், தைவான் குறித்து பேசியபோது, விவாதம் கோபப்பெருக்காக மாறியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தைவானின் சுதந்திரத்தை மீறும் வகையில் தனிப்பட்ட முறையில் எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் எதிர்ப்பதாக, ஜோ பைடன் கூறியதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கு கோபமாக பதிலளித்த ஜின்பிங், 'சீனாவை எதிர்ப்பதற்காக, சிலர் தைவானுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இது நெருப்போடு விளையாடுவதற்கு சமம். அவ்வாறு விளையாடுவோரும் பொசுங்குவர்' என, ஷி ஜின்பிங் ஆவேசமாக கூறியதாக, செய்தியில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் காலத்தில் கொரோனா தொற்றுப் பரவலை முன் வைத்து கொரோனா பரவலுக்கு சீனாவின் சதியே காரணம் என்று ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம்சாட்ட சீனா மறுக்க பல பிரச்சனைகள் மூண்டன.

    இருதரப்பும் மாறி மாறி வர்த்தகத்தில் வரிகளை அதிகரித்த வண்ணம் இருந்தனர், இதனால் இருதரப்பு வர்த்தகங்கள் முடங்கியதோடு கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக சிலபல உலக நாடுகள் ஒன்று திரளவும் செய்தது. இது சீன அதிபர் ஷி ஜின்பிங்கை கடும் கோபாவேசத்துக்கு ஆளாக்கியது. இதற்கிடையே அமெரிக்காவில் ஆட்சி மாறி ஜோ பைடன் அதிபரானவுடன் சீனாவுடன் உறவைப் புதுப்பிக்க முயன்று வருகிறார்.

    இந்நிலையில்தான், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். பெய்ஜிங்கில் இருந்து காணொளியில் இணைந்த ஷி ஜின்பிங், பைடனை பழைய நண்பரே என்று அழைத்து பேச்சை தொடங்கினார்.

    இரு நாடுகளுக்கு இடையே உள்ள போட்டி மோதலாக மாறி விடாமல் தடுக்க பேச்சுவார்த்தை அவசியம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இருந்தபடி ஷி ஜின்பிங்கிடம் வேண்டுகோள் வைத்தார்.

    இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று ஷி ஜின்பிங் கேட்டுக்கொண்டார்.

    Also Read: உலகின் பணக்கார நாடு சீனா; 120 ட்ரில்லியன் டாலர்கள்- அமெரிக்காவை முந்தியது
     கொரோனா பெருந்தொற்று, காலநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள அமெரிக்கா - சீனா இடையே ஆரோக்கியமான உறவு தேவை என்றும் சீன அதிபர் கேட்டுக்கொண்டார்.



    தைவான், உய்குர் இஸ்லாமிய மனித உரிமை மீறல், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்கள் விவாதித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: