சிரியாவில் 7 வயது சிறுமி, கட்டட இடிபாடுகளுக்கு அடியில் தனது சகோதரனை பாதுகாத்து வைத்திருந்த காட்சி, பாசத்தின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.
துருக்கி- சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினொராயிரத்தை தாண்டியுள்ளது இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களில் இதுவரை 8 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. வீடுகளை இழந்த சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், மைதானங்கள் ரயில்கள் மற்றும் மசூதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொறுங்கி, கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கின்றன. இவற்றில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சிரியாவில் இடிபாடுகளுக்குள் சிறுமி தனது தம்பியுடன் சிக்கியிருந்த காட்சி வெளியாகியுள்ளது. 17 மணி நேரம் இடிபாடுகளில் இருந்து மீட்பதற்காக காத்திருந்த சிறுமி, தனது சகோதரனை பாதுகாப்பதற்காக, அவனது தலையில் கையை வைத்து இருந்தது காண்போரை கண்கலங்க வைத்தது.
இந்த காட்சியை டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஐ.நா. பிரதிநிதி சஃபா, சிறுவர்கள் இருவரும் 17 மணி நேரம் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்ததாகவும், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மீட்பதற்கு முன்பு மருத்துவர் ஒருவருடன் பேசிய சிறுமி, தன்னையும் தம்பியையும் மீட்குமாறு கெஞ்சியுள்ளார். மேலும், என்ன கேட்டாலும் தாங்கள் செய்வதாகவும், வேலைக்காரர்களாக கூட இருக்கத் தயார் என்றும் சிறுமி கூறியதாக, சஃபா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதேபோல இட்லிப் நகரில் கட்டட இடிபாடுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன் ஒருவனை மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர். இரண்டு நாட்கள் இருளுக்குள் சிக்கி உயிருக்காக போராடிய சிறுவன், மீண்டும் வெளிச்சத்தை கண்ட உற்சாகத்தில் மீட்பு படையினரின் கண்ணங்களை பிடித்து கிள்ளியும், செல்லமாக அடித்தும் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினான். ஏராளமான சடலங்களை மீட்டு மன இறுக்கத்தில் இருந்து மீட்பு படையினருக்கு, சிறுவனை உயிருடன் மீட்டது புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.