உலக நாடுகளின் எதிர்ப்பையும் கடந்த நான்கு தினங்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்துவருகிறது. ரஷ்யாவின் இந்த படையெடுப்பால் இந்த உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. ரஷ்யாவின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தடை விதித்துவருகின்றன. இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்துவருகிறது.
அதனால், ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர். குறிப்பாக, உக்ரைனில் 5,000-த்துக்கும் மேற்பட்ட தமிழர்களும் சிக்கியுள்ளன. அவர்களை மீட்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்துவருகின்றனர். உக்ரைனுக்கு விமானம் செல்ல முடியாத சூழல் உள்ளதால் உக்ரைன் நாட்டின் இருக்கும் இந்தியர்கள் தரை வழிப் பயணமாக அண்டை நாடுகளுக்கு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி அண்டை நாடான ரொமேனியாகவுக்கு வந்த இந்தியர்கள் பத்திரமாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இன்று சுமார் மூன்று விமானங்கள் மூலம் 700-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், உக்ரைனின் வேறு பகுதியில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் எங்களால் அண்டை நாட்டுக்கு செல்ல முடியாமல் எங்களை எப்படியாவது மீட்க வேண்டும் என்று வீடியோ பதிவிட்டுள்ளனர். இந்தநிலையில் உக்ரைனின் சுமி நகரில் படித்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்களை மீட்க வேண்டும் என்று வீடியோ பதிவு வெளியிட்டுள்ளனர். அதில், ‘நாங்கள் வடகிழக்குப் பகுதியில் இருக்கிறோம். எங்களுக்கு சரியான தகவல்கள் கிடைப்பதில்லை. மேற்குப் பகுதியில் இருப்பவர்களை மீட்கத்தான் பேருந்துகள் வருகின்றன. நாங்கள்தான் மிகுந்த ஆபத்தான பகுதியில் இருக்கிறோம்.
எங்களையும் மீட்க வேண்டும். நாங்கள் போலந்து செல்லவேண்டுமென்றால் உக்ரைன் தலைநகரான கீவ் நகரத்தை தாண்டி 1,000 கி.மீ செல்ல வேண்டும். அது சாத்தியமில்லாதது. 20 மணி நேரத்துக்கும் மேலாக சாலை வழியாக பயணிக்கவேண்டியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதாவது முயற்சி எடுத்து எங்களைக் காக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.