சூயஸ் கால்வாயில் தரைத்தட்டிய ராட்சத கப்பல்: பெருமுயற்சியில் பகுதியளவு நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்

எவர்கிவன் கப்பல்

சூயஸ் கால்வாய் போக்குவரத்தை அடைத்து நின்ற மகாபெரிய, ராட்சத எவர் கிவ்வன் கப்பல் பகுதியளவில் நகர்த்தப்பட்டுள்ளதாக இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள சூயஸ் கால்வாய் சேவை நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

 • Share this:
  சூயஸ் கால்வாய் போக்குவரத்தை அடைத்து நின்ற மகாபெரிய, ராட்சத எவர் கிவ்வன் கப்பல் பகுதியளவில் நகர்த்தப்பட்டுள்ளதாக இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள சூயஸ் கால்வாய் சேவை நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

  ஆனால் இந்த ராட்சதக் கப்பல் எப்போது விடுவிக்கப்பட்டு மீண்டும் கடல்நீரில் ஓடும் என்பது பற்றிய விவரங்களை இவர்கள் அளிக்கவில்லை.

  சீனாவில் இருந்து மலேசியா வழியாக நெதர்லாந்து நாட்டுக்கு சென்று கொண்டிருந்த எவர் கிவன் சரக்கு கப்பல், கடந்த 23ஆம் தேதி எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நின்றது. 1300 அடி நீளமும், 2 லட்சத்து 20 ஆயிரம் டன் எடையும் கொண்ட கப்பல், கால்வாயின் குறுக்கே நின்றுவிட்டதால், அந்த வழியில் செல்லமுடியாமல் 320 கப்பல்கள் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றன.

  இதையடுத்து, சூயஸ் கால்வாயின் பக்கவாட்டில் மண் தோண்டப்பட்டு, 10க்கும் மேற்பட்ட இழுவைப் படகுகள் மூலம், கப்பலை மிதக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அதில் 30 டிகிரி அளவுக்கு இருபுறமும் அசையக்கூடிய நிலைக்கு கப்பல் நகர்ந்ததால், விரைவில் மீட்கப்படும் என்று அங்குள்ளவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

  இந்தநிலையில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபதா அல் சிசி, கப்பலில் வைக்கப்பட்டிருக்கும் சரக்குகளை அகற்றிவிட்டு, தரைதட்டிய கப்பலை மிதக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

  சரக்கு கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதை தவிர்க்கும் பொருட்டு சூயஸ் கால்வாயின் குறுகிய பரப்பை ஒவ்வொன்றாகவே கடந்து செல்கின்றன. 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான இந்த எவர்கிவ்வன் சரக்கு கப்பல் அன்று மணல் புயல் ஏற்பட்டதால் அதில் சிக்கி நிலை மாறியதாக கூறப்படுகிறது.

  இந்த கால்வாயில் கடக்க தேவையான அதிகபட்ச அளவில் எவர்கிவ்வன் கப்பல் இருந்துள்ளது. தைவான் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் ஜப்பானியருக்கு சொந்தமான இக்கப்பலின் பணிபுரிந்து வரும் 25 சிப்பந்திகளுமே இந்தியர்கள். அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

  இந்த எவர் கிவ்வன் கப்பல் இப்படித் தரைத்தட்டியதால் சுமார் 9 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வாணிபப் பொருட்கள் சிக்கியுள்ளன. கச்சா எண்ணெய் முதல் கால்நடை வரை இந்தக் கப்பல்களில் உள்ளன. ஆனால்  12 கப்பல்கள் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையான குட் ஹோப் துறைமுகம் வழியே தங்கள் பாதையை மாற்றிவிட்டன.

  பவுர்ணமி அன்று கடல் அலை பொங்கும் என்பதால் நீர்நிலை மேலேழும்பி கப்பலை அசைத்து நகர்த்த முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இவர்கள் பகுதியளவு நகர்த்தியுள்ளதாக கூறும் அதே வேளையில் மரைன் டிராபிக் டாட் காம் என்ற இணையதளத்தில் காட்டப்படும் செயற்கைக்கோள் தரவின் படி அது இன்னமும் அப்படியே இருப்பது போல்தான் தெரிகிறது.

  இரவு முழுதும் கப்பலை நகர்த்த பணியாற்றும் ஊழியர்கள் கப்பலைச் சுற்றி இருக்கும் 27,000 கன அடி மணல் மற்றும் சேற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

  எவர் கிவன் கப்பல் நிறுவனம் கப்பலின் இன்ஜின் நன்றாகத்தான் உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தனர். உலக அளவில் கச்சா எண்ணெய் செல்வதில் 7% எண்ணெய் இந்த வழியேதான் செல்கிறது இந்நிலையில் வழியை அடைத்து இந்த எவர் கிவன் பாறையாக நிற்பதால் சப்ளை செயின் தொந்தரவாகும் என்று நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

  கப்பலில் உள்ள 20,000 கண்டெய்னர்களையும் இறக்கி விட்டு கப்பலை நகர்த்தலாம் என்ற முயற்சி பயனளிக்காது அது ஒரு மிகப்பெரிய வேலை என்றும் இதற்கான சிறப்பான உபகரணங்கள் எகிப்தில் இல்லை என்றும் சில நிபுணர்கள் அந்த வாய்ப்பையும் முடியாது என்று மறுத்து விட்டனர்.
  Published by:Muthukumar
  First published: