ஐபிஎல்லில் விளையாடும் இலங்கை வீரர்கள் அனைவரும் ஒரு வார காலம் போட்டிகளை விட்டு விட்டு, மக்களுக்கு துணை நிற்கும் விதமாக போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என முன்னாள் கேப்டன் ரணதுங்கா கோரிக்கை வைத்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கையில், மக்கள் வீதிகளில் இறங்கி கடந்த இரண்டு வாரங்களாக பெரும் போராட்டத்தை நடத்திவருகின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட தேக்க நிலையால் அந்நாடு மாபெரும் பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளது.
உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகள் விண்ணை முட்டும் நிலையில், மின்சார தட்டுப்பாடு காரணமாக பல மணி நேர மிட்டு வெட்டு அங்கு வாடிக்கையாகியுள்ளது. இந்த நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவின் அரசு தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
அரசை பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகளும், பொது மக்களும் பெரும் போராட்டத்தை நடத்திவருகின்றனர். மக்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் விதமாக இலங்கை வீரர்கள் ஐபிஎல் தொடரை புறக்கணித்து நாடு திரும்ப வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நாட்டின் இந்த அவல நிலைப்பற்றி பேசாமல், சில கிரிக்கெட் வீரர்கள் சுகமாக ஐபிஎல் போட்டியில் விளையாடிவருகின்றனர். இந்த வீரர்கள் அரசு குறித்து பேச அஞ்சுவது வருந்தத்தக்கது. அரசின் அமைச்சகத்தின் கீழ் விளையாடி வரும் இவர்கள் தங்கள் வேலையை பாதுகாத்துக்கொள்ள அமைதி காத்துவருகின்றனர். ஆனால், சில இளம் வீரர்கள் அஞ்சாமல் களத்தில் நிற்கின்றனர். அவர்களை பார்த்தாவது இந்த வீரர்கள் முன்வர வேண்டும்.மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். தவறு நடக்கும்போது அதை எதிர்த்து கேட்க, தைரியத்துடன் வெளியே வர வேண்டும். என்னை ஏன் போராடவில்லை என பலரும் கேட்கிறார்கள்.
திருடர்களுடன் அமர விரும்பவில்லை - உடனடியாக தேர்தல் தேவை- இம்ரான்கான்
நான் அரசியல் வாழ்வில் 19 ஆண்டுகள் பயணித்துவருகிறேன். ஆனால் இது அரசியல் போராட்டம் அல்ல. மக்களின் போராட்டம். எந்தவொரு அரசியல் கட்சியும் இதில் பங்கேற்கவில்லை. ஐபிஎல் போட்டிகளில் எந்த எந்த வீரர்கள் விளையாடுகிறார்கள் என்று எனக்கு தெரியும். அவர்களின் பெயரை குறிப்பிட்ட பேச விரும்பவில்லை. எனவே, அனைத்து வீரர்களும் ஒரு வார காலம் ஐபிஎல் போட்டியை விட்டு விட்டு, மக்களுக்கு துணை நிற்கும் விதமாக போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்" என கோரியுள்ளார்.
58 வயதான ரணதுங்கா இலங்கை அணியின் கேப்டனாக இருந்து 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றுள்ளார். கிரிக்கெட் ஓய்வுக்கு பின்னர் அரசியலில் சேர்ந்த ரணதுங்கா, முன்னாள் அதிபர் சிறிசேனா அரசில் அமைச்சராக இருந்துள்ளார். கடந்த ஓராண்டாக தீவிர அரசியலில் இருந்து ரணதுங்கா ஒதுங்கியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.