இலங்கையில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அங்கு சமூக வலைதளங்களுக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
போராட்டங்கள் தீவிரம் அடைவதற்கு சமூக வலைதளங்கள் முக்கிய காரணமாக இருந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்திருப்பதாலும், பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாலும் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் உள்ளனர்.
இதையும் படிங்க - இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைய என்ன காரணம்? அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்...
அமைதியை கொண்டு வரும் முயற்சியாக திங்கள் கிழமை காலை வரையில் ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை முதல் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் மற்றும் யூடியூபிற்கு இலங்கையில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தற்காலிகமானது என்றும் நிலைமை சீரடையும்போது தடை விலக்கப்படும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. பொருளாதார பாதிப்பு தீவிரம் அடைந்திருப்பதால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து அரசு சனிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரையில் ஊரடங்கை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க - பொருளாதார நெருக்கடி.. அசாதாரண அரசியல் சூழல்: இலங்கையில் அவசரநிலை பிரகடனம்
இதற்கிடையே, ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக 600 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் உணவு, மருந்துகள், எரிபொருள் என அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து தட்டுப்பாட்டில் உள்ளன.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்திற்கு வரம்பற்ற அதிகாரம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி எந்த விசாரணையும் இல்லாமல் சந்தேகப்படும் நபரை நீண்ட காலம் சிறையில் அடைக்க அனுமதி தரப்பட்டுள்ளது.
இலங்கையில் அமைந்த அரசுகளின் மோசமான நிர்வாகமும், கொரோனா பாதிப்பும்தான் பொருளாதார நெருக்கடி நிலைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இதற்கிடையே, 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை நேற்று இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.