இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், அந்த நாட்டுக்கு உதவ உலக வங்கி முன்வந்துள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கு ரூ.4,500 கோடி வழங்க முடிவுசெய்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி அவரது அலுவலகம் எதிரே ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு, அதனை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அமைப்புகளிடமும் உதவி கோரி வருகிறது.
இந்நிலையில் வாஷிங்டனிற்கு சென்றுள்ள அந்நாட்டின் நிதியமைச்சர் அலி சப்ரி, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு காணொலி வாயிலாக கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், இலங்கைக்கு அவசர நிதியுதவி அளிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அந்த உதவி கிடைக்க இன்னும் சில காலம் ஆகும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதற்கு முன்னதாக, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக அடுத்த 4 மாதங்களில், இலங்கைக்கு உலக வங்கி நான்காயிரத்து 500 கோடி ரூபாய் வழங்க உள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: கொரோனாவுடன் அதிக நாள் போராட்டம் நடத்திய நபர் இவர் தான் - ஆய்வில் தகவல்
அண்டை நாடான இந்தியா, மூவாயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருட்களை வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு இந்திய அரசு ஏற்கனவே ஏழாயிரத்து 600 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளதாகவும், அதே அளவிலான நிதியுதவியை மீண்டும் இந்தியாவிடம் இருந்து பெற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அலி சப்ரி தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.