இலங்கையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு பங்குச்சந்தை திறக்கப்பட்ட நிலையில், 13 சதவிகித வீழ்ச்சியை கண்டதால் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக் கோரி போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கொழும்புவில் அதிபர் மாளிகை அருகே நடைபெற்று வரும் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பேரணியாக சென்ற மாணவர்கள் அதிபர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள மைதானத்தில் கூடி செல்போன் டார்ச் விளக்குகளை ஒளிரவிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.
போராட்டங்கள் ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கொழும்பு பங்குச் சந்தையில் இரு வாரங்களுக்கு பிறகு மீண்டும் வர்த்தகம் தொடங்கியது. ஆனால் வர்த்தகம் தொடங்கிய சில நொடிகளில், உள்ளூர் Standard & Poor குறியீடு 7 சதவிகிதம் சரிவை கண்டது. சிறிது நேர ஸ்திரதன்மைக்கு பின்னர் மீண்டும் 13 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டதால், பங்குச் சந்தை மூடப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் பங்குகளின் மதிப்பு 40 சதவீதம் வரை குறைந்துள்ளன.
இதையும் படிக்க: நிலச்சரிவில் இருந்து தப்பிக்க பிரிட்ஜிக்குள் ஒளிந்த சிறுவன்.. அடுத்து என்ன நடந்தது?
இது ஒருபுறமிருக்க உணவுப் பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்தின் எதிரொலியாக, இலங்கையில் இருந்து தமிழ் நாட்டில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த யோகன், மாலா, கதிரமலை, ஜெயராம், பேபி ஷாலினி என 9 மாத கை குழந்தையுடன் 5 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் ஒரு பைபர் படகு மூலம் கோதண்டராமர் கோவில் கடற்கரையை வந்தடைந்தனர். கடந்த மார்ச் 24ம் தேதி முதல் இது வரை 75 பேர் அகதிகளாக தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.