பெரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளின் பட்டியலில் சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, துறைமுகங்கள், விமான நிலையம், உணவு விநியோகம் மற்றும் விவசாயம் ஆகியவை அடங்கும். ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகள் அல்லாத அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தற்போதுள்ள எரிபொருள் இருப்பு அத்தியாவசிய சேவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எரிபொருளை விநியோகிக்க அந்நாட்டு அரசு டோக்கன் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளிகள் மூடப்பட்டும், அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த தீவு நாட்டில் எரிபொருள் தீர்ந்து போனது இதுவே முதல்முறை ஆகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அந்நாட்டில் எரிபொருளின் விலை ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. கடைசி விலை உயர்வு நேற்று நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் ஒரு லிட்டர் 550 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 460 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
புதிய எண்ணெய் ஏற்றுமதி குறித்து தற்போதைக்கு எந்த தெளிவும் இல்லை என இலங்கை எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். அதனால், எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று நாட்டு மக்களை வலியுறுத்தியும் உள்ளார். இன்று நடக்கவிருக்க ஷிப்மெண்ட்டானது சப்ளையர்கள் பணம் செலுத்துவதில் உறுதியற்ற தன்மை, மற்றும் மற்ற சிக்கல்களைக் காரணம் காட்டி டெலிவரி செய்ய இயலவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், நாட்டில் டாலர்கள் தீர்ந்துவிட்டதால் இன்னும் ஏற்றுமதி திட்டமிடப்படவில்லை என கூறியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இலங்கை அமைச்சர்கள் ரஷ்யாவிற்கும் கத்தாருக்கும் பயணித்து இலங்கைக்கு அதிக எரிபொருள் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை நாடானது 1948-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும், கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதியளிக்க முடியாத நிலையில் சிக்கித் தவிக்கிறது.
பொது போக்குவரத்து பற்றாக்குறை மற்றும் தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்ய இயலாமை காரணமாக, வேலைக்குச் செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கையை கடுமையாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சகத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை தனது அவசரகால திட்டத்தைத் தொடங்கிய அடுத்த நாள் இந்த உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஐந்தில் நான்கு பேர் உணவு உண்ண முடியாத நிலையில் உணவு பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. கொழும்பு பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு வவுச்சர்கள் விநியோகிக்கத் தொடங்கியுள்ளதாக உலக உணவுத் திட்டம் (World Food Programme) தெரிவித்துள்ளது.
Published by:Archana R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.