இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவு யாருக்கு?

வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன்

 • News18
 • Last Updated :
 • Share this:
  இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இன்னும் மூன்று நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  இலங்கையில் அதிபர் தேர்தல், வரும் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் சஜித் பிரேமதாசா, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் சார்பாக கோத்தபய ராஜபக்சே உட்பட 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியுள்ளன.

  மலையக தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பு சட்டம், தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதியம் ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்களின் மீள் குடியேற்றம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி சஜித் பிரமதாசாவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் தேர்தல் அறிக்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலீடுகளை மேற்கொள்தல், தோட்ட தொழிலாளர்களுக்கான ஊதியம் ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

  இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பிறகே யாருக்கு ஆதரவு அளிப்பது என முடிவெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

  Published by:Sankar
  First published: