35 ஆண்டுகளுக்குப் பின் சென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை! மக்கள் வரவேற்பு

35 ஆண்டுகளுக்குப் பின் சென்னையிலிருந்து யாழ்பாணத்துக்கு விமான சேவை! மக்கள் வரவேற்பு
விமான சேவை
  • News18
  • Last Updated: October 17, 2019, 9:15 PM IST
  • Share this:
சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக நேரடி விமான சேவை இன்று தொடங்கப்பட்டதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக திருச்சி, மதுரையில் இருந்தும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

1940-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி பகுதியில் ஆங்கிலேயர்கள் விமானப் படைத் தளம் அமைத்தனர். 1948-ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின் விமான நிலையமாக பலாலி செயல்பட்டு வந்தது. சென்னையில் இருந்து பலாலி வழியாக கொழும்புவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், 1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்பட்ட பின், பலாலி விமான நிலையம் மூடப்பட்டது.

2009-ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த போதும், கடும் சேதம் அடைந்ததால் பலாலி விமான நிலையம் காட்சிப் பொருளாக மாறியது. கடந்த ஜூலை மாதம் 225 கோடி ரூபாய் செலவில் விமான நிலையத்தை சீரமைக்கும் பணி தொடங்கியது.


யாழ்பாண விமானநிலையம்


இலங்கை அரசு 195 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ததிருந்த நிலையில், இந்தியா 30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது.  இதை தொடர்ந்து, ஏா் இந்தியாவின் அலையன்ஸ் ஏா் நிறுவன விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் படி, அலையன்ஸ் ஏா் நிறுவனத்தின் ஏ.டி.ஆர். ரக விமானம், இன்று காலை 8.55 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டது. 72 இருக்கையில் கொண்ட இந்த விமானத்தில், விமானிகள், தொழில்நுட்ப வல்லுனா்கள், பொறியாளா்கள், பெண் ஊழியர்கள் என மொத்தம் 27 போ் பயணித்தனர்.இன்றைய பயணத்தில் அலையன்ஸ் ஏா் விமானத்தில் பயணிகள் யாரும் செல்லவில்லை. இதனிடையே, பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

36 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதல் முறை விமான சேவை தொடங்கப்பட்டதை, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது, இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங்கும் உடன் இருந்தார்.

முன்னதாக, பலாலியில் அலையன்ஸ் ஏா் விமானம் தரையிறங்கியதும் தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக மக்கள் தெரிவித்தனர். புதிதாக திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் விமானத்தின் ஓடுதளம் 2 புள்ளி 3 கிலோ மீட்டர் ஆகும்.

முதற்கட்டமாக நவம்பர் முதல் சென்னை, திருச்சி, கொச்சியில் இருந்து விமானங்கள் இயக்கப்படும். பின்னர் பெங்களூரூ, கோவை, மும்பை, ஹைதராபாத், டெல்லி ஆகிய நகரங்களிலிருந்தும் விமானங்களை இயக்க இருநாட்டு அரசுகளும் திட்டமிட்டுள்ளன.

இலங்கை அரசு மட்டகளப்பு விமான நிலையத்தை ஏற்கெனவே சர்வதேச விமான நிலையமாக அறிவித்துள்ளது.  இலங்கையின் வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் 20 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவிலிருந்து மட்டகளப்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு தொடங்கப்பட்டுள்ள நேரடி விமான சேவை, சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் என கருதப்படுகிறது.

Also see:
First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்