இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவு

இலங்கை அதிபர் சிறிசேனா

Srilanka | இலங்கையில் சமீப காலமாக அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்துவந்த நிலையில், பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுளார்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே கடந்த 23-ம் தேதி திடீரென நீக்கப்பட்டு புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே நியமிக்கப்பட்டார். அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இந்த நடவடிக்கை அந்நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. தன்னை நீக்கியது அரசியல் சாசனப்படி செல்லாது எனக் கூறிய ரணில் விக்கிரமசிங்கே, தான் பிரதமராக நீடிப்பதாக அறிவித்தார்.
இலங்கை பிரதமராக பொறுப்பேற்ற ராஜபக்சே
புதிய பிரதமராக பொறுப்பேற்ற ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையும் கடந்த திங்களன்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அந்நாட்டு பாராளுமன்றத்தை 16-ம் தேதிவரை முடக்கிவைத்து சிறிசேனா உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை குறிப்பிட்டு, சபாநாயகர் கரு ஜெயசூரியா, “நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில்தான் பிரதமர்” என்று சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.


இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூரியா

நாடாளுமன்றத்தின் மீதான முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும், ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வலியுறுத்தி வந்தன.

நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக அதிபருடன், ஜெயசூரியாவுக்கு மோதல் நிலவியது. ராஜபக்சே அரசுக்கு பெரும்பான்மை இருந்தால் நாடாளுமன்றத்தை உடனே கூட்டி நிரூபிக்க வேண்டும் என ரணில் கூறி வந்தார்.

ராஜபக்சே அரசுக்கு போதிய பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் நிலவியது, இதனால் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது.

அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டது இன்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sankar
First published: