ரூ.30 கோடி வரை லஞ்சம் - ராஜபக்சே மீது ரணில் பகிரங்க குற்றச்சாட்டு

Srilanka Political Crisis | இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே தனது அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து அழுத்தங்கள் முன்வைக்கப்படுகிறது.

ரூ.30 கோடி வரை லஞ்சம் - ராஜபக்சே மீது ரணில் பகிரங்க குற்றச்சாட்டு
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்கே
  • News18
  • Last Updated: November 6, 2018, 9:53 PM IST
  • Share this:
அணி மாறிய எம்.பி.க்களுக்கு ராஜபக்சே தரப்பிலிருந்து 20 முதல் 30 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்கே பேட்டியளித்துள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே வரும் 14-ம் தேதி அந்நாட்டு பாராளுமன்றத்தை கூட்ட அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சே தனது அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து வலியுறுத்தப்படுகிறது. தானே பிரதமராக நீடிப்பதாக கூறிவரும் ரணில் விக்கிரமசிங்கே நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

கேள்வி: நாடாளுமன்றம் இன்று கூட்டப்பட்டால் உங்களால் பெரும்பான்மயை நிரூபிக்க முடியுமா?


பதில்: சபாநாயகரை பொறுத்தவரையிலும் எதிர்த்தரப்புதான் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே எங்கள் பலத்தை நிரூபித்துள்ளோம்.

கேள்வி: நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எதிர்த்தரப்பு தோற்கும் என நம்புகிறீர்களா?

பதில்: கண்டிப்பாக தோற்கும்.கேள்வி: எம்.பி.க்களிடம் பேரம் பேசுவதற்காகவே நாடாளுமன்ற கூட்டத்தை தாமதிக்கும் யுக்தி கையாளப்படுகிறதா?

பதில்: மக்களின் எதிர்ப்பால் 16-ம் தேதிக்கு பதிலாக 14-ம் தேதியே நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர். இது போதுமானது அல்ல எனினும் எதிர்ப்பு வேலை செய்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது.

கேள்வி: உங்களுக்கு தெரிந்தவரை எம்.பி.க்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்படுகிறது?

பதில்: எம்.பி.க்களுக்கு 20 முதல் 30 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெற தமிழ் மக்களுக்கு இது வரை என்ன செய்துள்ளீர்கள் என்பதை சுட்டிக்காட்ட முடியுமா?

பதில்: தமிழர்களின் மறுவாழ்வு, அரசியல் ரீதியான தீர்வு. அவர்களின் மற்ற கோரிக்கைகளும் பரீசீலிக்கப்படும் அதில் பெரும்பான்மையானவை ஏற்கக்கூடியதாக இருக்கும் என நம்புகிறேன். சிலவற்றை ஏற்க இயலாது. நாங்கள் ஏற்கெனவே ஒன்றாக பணியாற்றியுள்ளோம். அரசின் கொள்கைகளால் வடக்கில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கேள்வி: மூன்றாண்டுகளில் மலையக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்பது அமைச்சர்கள் வடிவேல் சுரேஷ், எம்.பி வியாழேந்திரன் புகாராக உள்ளதே?

பதில்: நிலத்தின் மீதான அவர்களின் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலங்களில் அவர்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. பொதுவான விஷயமாக இருந்தாலும் கூட வளர்ச்சிக்கான தனி அமைச்சகம் உள்ளது.

கேள்வி: அரசியல் குழப்பங்களுக்கு முன் நீங்களும் ராஜபக்சேவும் தனித்தனியே இந்தியாவுக்கு வந்து சென்றீர்கள். இதுதான் பிரச்சனையின் தொடக்கம் என கூறப்படுகிறது. இது பற்றி?

பதில்: சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில்தான் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக ராஜபக்சே வந்தார். என்னுடைய பயணம் அதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. வியட்நாம் மற்றும் இலங்கையில் நடைபெற்ற கூட்டங்களுக்குப் பின்னர் நான் இந்தியாவுக்கு வந்தேன். இது என்னுடைய திட்டமிடப்பட்ட கூட்டங்களே தவிர வேறேதும் இல்லை

கேள்வி: ராஜபக்சேவை பிரதமராக அறிவித்த உடன் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றார். ஆகவே இந்தியா இந்த முடிவை ஆதரிப்பதாக கருதுகிறீர்களா?

பதில்: சுப்பிரமணியன் சுவாமி தனித்து செயல்படக் கூடிய நபர். இதனை பாஜ.க. பல இடங்களில் உணர்த்தியிருக்கிறது. அவருடைய கருத்தை கட்சியின் கருத்து அல்ல என மறுத்து வந்திருக்கிறது.

கேள்வி: இலங்கை அரசியல் குழப்பத்தை புவிசார் அரசியலோடு தொடர்பு படுத்தலாமா?

பதில்: நான் அவ்வாறு கூற மாட்டேன் இது முழுக்க முழுக்க உள்நாட்டு அரசியல் சார்ந்த விவகாரமே. ஆனால் இது புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்

கேள்வி: ராஜபக்சேவுக்கும் உங்களுக்கும் இடையிலான போட்டியை இந்தியா- சீனாவுடன் ஒப்பிட்டு இலங்கை மீது கட்டுப்பாட்டை செலுத்த நினைக்கும் போட்டியாக சிலரால் கருதப்படுகிறது? உண்மையா?

பதில்: நான் அவ்வாறு பார்க்கவில்லை, அனைத்து நாடுகளுடன் நாங்கள் நட்புறவுடன் இருக்கிறோம்.

கேள்வி: இந்த குழப்பங்களுக்கு முன் இந்தியாவின் முன்னணி செய்தித்தாள் ஒன்று சிறிசேனாவை இந்தியா கொல்ல திட்டமிட்டிருந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது அதனை அவர் மறுத்தாலும் இந்த ஒட்டு மொத்த விஷயத்தையும் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இந்த விஷயம் குறித்து அதிபர் சிறிசேனா பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு விளக்கம் அளித்து விட்டார்.

கேள்வி: சிறிசேனா 130 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக குறிப்பிட்டுள்ளாரே ?

பதில்: 130 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டியது தானே?

கேள்வி: நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுப்பதில்லை என்றும் (மங்கள சமரவீரா) "பட்டர்ஃபிளை கேங்" - ன் வழிகாட்டுதலின் படி முடிவெடுக்கிறீர்கள் என கூறப்படுவது பற்றி?

பதில்: எனக்கு அப்படி யாரையும் தெரியாது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனும் ஆலோசித்து முடிவெடுப்பேன். சில நேரங்களில் பொதுவாக அனைத்து முடிவுகளும் அமைச்சரவைக் கூட்டங்களிலேயே எடுக்கப்படும். சில நேரங்களில் அதிபருடன் கலந்தாலோசிக்கப்படும்

கேள்வி: சர்வதேச தமிழ் சமூகத்திற்கு நீங்கள் சொல்லவிரும்பும் செய்தி என்ன?

பதில்: தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களர்களுக்கும் சேர்த்து நான் கூற விரும்புவது ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையிலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மறுவாழ்வு மற்றும் பொருளாதார, அரசியல் வளர்ச்சி மற்றும் மீள்கட்டமைப்பில் 2016 ல் தொடங்கி நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இவையனைத்தும் அதிபரின் சிரத்தையற்ற முடிவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்

கேள்வி: இந்தியா - சீனா இடையே சச்சரவு ஏற்படுத்த நீங்கள் முயலுவதாக சிறிசேனா குற்றம் சாட்டுகிறாரே?

பதில்:  நான் அவ்வாறு செய்யவில்லை

பேட்டியின் வீடியோ கீழே:

First published: November 6, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்