Home /News /international /

இலங்கையில் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து சமூகவலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- ஊரடங்கை மீறி தொடரும் போராட்டம்

இலங்கையில் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து சமூகவலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- ஊரடங்கை மீறி தொடரும் போராட்டம்

இலங்கை

இலங்கை

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளன.

    இலங்கையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதோடு, சமூகவலைதளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டதால் அமைச்சர் நமல் ராஜபக்சே உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சமூகவலைதளங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் தவித்து வரும் பொதுமக்கள், அரசின் அவசர நிலை பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, நாடு முழுவதும் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், கொழும்பு வீதியில் படுத்து உறங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபோன்ற போராட்டங்கள் நாடு முழுவதும் பரவும் என்ற அச்சமடைந்துள்ள இலங்கை அரசு, போராட்டங்களை ஒடுக்கும் விதமாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களை முடக்கியது. வாட்ஸ் அப் உள்ளிட்டவையும் செயல்படாததால், இலங்கை மக்கள் கடும் அச்சமடைந்துனர். அத்துடன், தலைநகர் கொழும்பு வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் மற்றும் ராணுவத்தினர், ஊரடங்கை மீறியதாக 600க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

    சாலைகள், பூங்காக்கள், ரயில் நிலையங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட பொது இடங்களில் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி யாரும் நடமாடக் கூடாது என அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

    இலங்கை அரசின் ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டதற்கு தெரிவித்து அந்நாட்டின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப கழகத்தின் தலைவர் ஓஷத சேனாநாயக்க, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ''பாகிஸ்தான் எதிர்காலத்தை வெளிநாட்டினர் தீர்மானிக்க கூடாது'' : இம்ரான் கான் ஆவேசம்

    இதேபோல், இலங்கை அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்சே, சமூக வலைதளங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் முற்போக்காக சிந்திந்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், இத்தகைய தடைகள் முற்றிலும் பயனற்றது எனவும் அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

    இந்த சூழலில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறியுள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Srilanka

    அடுத்த செய்தி