இலங்கையில் மக்கள் புரட்சியால் பதவி விலகும் அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில்!
இலங்கையில் மக்கள் புரட்சியால் பதவி விலகும் அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில்!
அதிபர் பதவியிலிருந்து விலகும் கோத்தபய
Gotabaya to resign : இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட கோத்தபய ராஜபக்ச, வரும் 13ம் தேதி பதவி விலக ஒப்புதல்.
இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அதிபர் மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட கோத்தபய ராஜபக்ச, வரும் 13ம் தேதி பதவி விலக ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதனிடையே, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்கேவும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
சுதந்திர இலங்கையின் வரலாற்றில், ஜூலை 9ம் தேதி மிக முக்கியமான நாளாக இடம்பெறும் என்று, அன்றைய தினம் காலை வரை யாருமே நம்பியிருக்க மாட்டார்கள். பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இலங்கையின் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என பிடிவாதம் பிடித்து வந்த கோத்தபய, மக்கள் புரட்சியால், அதிபர் மாளிகையில் இருந்து ஜூலை 9ம் தேதி வெளியேற்றப்பட்டுள்ளார். வரும் 13ம் தேதி அவர், அதிபர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக இலங்கை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கோத்தபயவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைவதை அறிந்த இலங்கை அரசு, வெள்ளிக்கிழமை இரவு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ரயில், பேருந்து மற்றும் வாகன சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி, தலைநகர் கொழும்புவில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் முதலில் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். பாதுகாப்பு தடைகளை மீறி அவர்கள் உள்ளே நுழைந்த போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 33 பேர் காயமடைந்தனர். அதில் மூவர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதிபர் மாளிகையில் இருக்கும் நீச்சல் குளங்களில், போராட்டக்காரர்கள் குளிக்கும் காட்சிகளும், அங்கிருக்கும் கார்களை எடுத்து ஓட்டும் காட்சிகளும் வெளியாகின. ஒரு சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஒட்டுமொத்த இலங்கையும், பொருளாதார பாதிப்பில் சிக்கித் தவித்து வரும் நிலையில், ஒரே ஒரு குடும்பம், இப்படி எண்ணற்ற சொகுசுக் கார்களை வாங்கிக் குவித்திருந்தது போராட்டக்கார்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச, ராணுவ தலைமையகத்தில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோத்தபயவுக்கு எதிரான போராட்டத்தின் நீட்சியாக, பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என ரணில் விக்ரமசிங்கேவும் அறிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பின் பேரில், சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அனைத்து கட்சி உறுப்பினர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உடனே பதவி விலக வேண்டும் என்றும், தற்காலிக அதிபராக சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று, பிரதமர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாகவும், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கொண்ட புதிய ஆட்சி பொறுப்பேற்க வழிவகை செய்ய தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே, ஜூலை 9ம் தேதி காலை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், இரவில் பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு தீ வைத்தனர்.
கொழும்பு நகரின் ஐந்தாம் வீதியில் உள்ள ரணிலின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பிரதமருக்கு சொந்தமான வாகனங்களையும் அவர்கள் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. தனது மரணத்திற்கு பின் கொழும்பு ராயல் கல்லூரிக்கு அந்த வீட்டை வழங்க ரணில் உயில் எழுதி வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் போராட்டத்தால், வேறு வழியின்றி பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மே மாதம் பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக ரணில் அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே 5 முறை இலங்கை பிரதமராக இருந்த ரணில், 6வது முறையாக மீண்டும் பிரதமராக அறிவிக்கப்பட்டது, இலங்கை மக்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ராஜபக்ச குடும்பத்துக்கு ரணில் நெருக்கமானவராக அறியப்பட்ட காரணத்தால், அவர் பிரதமராக இருப்பதன் மூலம் ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும் என்று நம்பப்பட்டது. இலங்கை பிரதமராக ஆறு முறை இருந்தாலும், தமது பதவிக் காலத்தை ஒரு முறை கூட ரணில் முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Ilakkiya GP
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.