இலங்கையில் எரிபொருள் நிலையங்களில் வாகன ஓட்டிகளுக்கு வாரத்திற்கு குறிப்பிட்ட அளவிலான எரிபொருள் மட்டுமே விநியோகிக்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. எரிபொருளை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்க அவற்றின் விற்பனையில் புதிய நடைமுறையை பின்பற்ற இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, டிவிட்டரில் அடுத்தடுத்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டார். அதில், நிதிச் சிக்கல்களுக்கு மத்தியில் ஒரு வாரத்திற்கான எரிபொருளை ஒவ்வொரு முறையும் அரசு இறக்குமதி செய்கிறது, ஆனால், சில நுகர்வோர் தங்கள் இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்காக, ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருட்களை ஒரே அடியாக வாங்கி செல்வதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு மூலமாக வாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலன எரிபொருளை மட்டுமே,விநியோகிக்கும் முறை ஜூலை முதல் வாரத்தில் இருந்து அமலுக்கு வரும் என நம்புவதாக கஞ்சன விஜசேகர கூறியுள்ளார்.
மேலும் படிக்க: சீனாவில் உயரும் கொரோனா தொற்று எண்ணிக்கை- புதிய அலைக்கு ஆயத்தமாகிறதா?
நிலையாக எரிபொருள் வழங்கும் சூழல் உருவாகும் வரையில் இந்த நிலை தொடரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய் தேவையை அதிகரித்துள்ளதாக கூறிய கஞ்சன விஜசேகர, 4 மாதங்களுக்கு முன்பு 200 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த மாதாந்த எரிபொருள் கட்டணம் தற்போது 550 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாக கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.