மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அங்கு வன்முறை வெடித்துள்ளது. இலங்கை அரசில் இருந்து ராஜபக்சேக்கள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் தன்னெழுச்சி போராட்டங்கள் வன்முறையாக மாறி 8 பேர் பலியானதுடன், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதனிடையே பிரதமர் பதவியில் இருந்து கடந்த திங்களன்று மகிந்த ராஜபக்சே அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்தார். தொடர்ந்து,ராஜபக்சேவின் வீடு உள்ளிட்ட சொத்துக்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொருக்கி தீக்கிரையாக்கப்பட்டன.
இதனிடையே உயிருக்கு அஞ்சி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் இலங்கை திரிகோணமலை பகுதியில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப திட்டமா? மத்திய அரசு விளக்கம்
போராட்டங்கள் காரணமாக இலங்கையில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதே போல பெட்ரோல், டீசல் விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சக பொதுமக்கள் மீது தாக்குதல்களில் ஈடுபடுவோரை சுட்டுத் தள்ள இலங்கை அரசு அதிரடியாக உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து, இலங்கையில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஈடுபட்டிருந்த நிலையில், புதிய அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் அழைத்துப் பேசி வருகிறார். அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தும் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து அவர் அதனை தவிர்த்தார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக அதிபர் கோத்தபய ராஜபக்ச தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நியமனம் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்பார் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mahinda Rajapakse, Srilanka