இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டின் அரசை எதிர்த்து பொதுமக்கள் பெரும் போராட்டத்தை மேற்கொண்டனர். கடந்த 9ஆம் தேதி தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, அதை சூறையாடினார். போராட்டமானது ராணுவம் மற்றும் காவல்துறையின் கையை மீறி போன நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பி, ராணுவ உதவியோடு தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றார். முதலில் மாலத்தீவுக்கு சென்று தஞ்சம் புகுந்த ராஜபக்ச பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று தஞ்சம் புகுந்துள்ளார்.
அங்கிருந்து கொண்டே தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு இ மெயில் மூலம் கோத்தபய அனுப்பியுள்ளார். கோத்தபயவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டின் சபாநாயகர் அபயவர்தனா, இடைக்கால அதிபர் பொறுப்பு ரணில் விக்ரமசிங்கேவுக்கு வழங்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் பொறுப்பேற்றுக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் புதிய அதிபர் தேர்வு வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ள சபாநாயகர் இதற்கான வேட்புமனு வரும் 19ஆம் தேதி ஏற்கப்படும் என்றுள்ளார்.
புதிய அதிபருக்கான போட்டியில் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரமதாசா, துல்லாஸ் அல்லஹபெருமா, அனுரகுமாரா திசநாயகா ஆகியோர் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:
டொனால்டு ட்ரம்ப்பின் முன்னாள் மனைவி இவானா ட்ரம்ப் காலமானார்
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்ச, அவரது சகோதரர்கள் பசில் ராஜபக்ச ஆகியோர் வெளிநாடு செல்ல தடை கோரி அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை முடியும் வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என இருவரும் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளனர். முன்னதாக, அதிபராக இருந்த கோத்தபய இலங்கையை விட்டு தப்பிச் செல்ல இந்திய அரசு உதவியதாக தகவல்கள் பரவியது. இதை மறுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இந்திய அரசு, அம்மக்கள் தங்கள் விருபத்தை ஜனநாயக ரீதியாக நிறைவேற்ற துணை நிற்கும் என விளக்கமளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.