இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும், அதிபர் ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தியும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை அரசுக்கு அச்சாரமாக இருப்பது சுற்றுலாப் பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாய்தான். இதுவே அந்நாட்டிற்கு அதிகளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும். ஆனால் கொரோனா பரவலுக்குப் பிறகு, இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வராததால், அந்நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.
அத்துடன், இலங்கை அரசின் புதிய விவசாயக் கொள்கையால், அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதோடு, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளன. குறிப்பாக, சாதாரண அரிசி விலையே கிலோ 200 ரூபாயை தாண்டிய நிலையில், பருப்பு 250 ரூபாய்க்கும், சர்க்கரை 215 ரூபாய்க்கும், உளுந்து 2 ஆயிரம் ரூபாய் வரையும் விற்கப்படுகிறது.
அதேபோல் வெங்காயம் 400 ரூபாய் வரையும், உருளைக்கிழங்கு 300 ரூபாய் வரையும் விற்கப்படுவதோடு, ஒரு லிட்டர் பெட்ரோல் 283 ரூபாய்க்கும், டீசல் 214 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலையும் வரலாறு காணாத வகையில், ஒன்றரை லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
Also Read: சீனாவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
சமையல் எரிவாயு விலையும் கிடுகிடுவென உயர்ந்ததோடு, கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால், இலங்கை மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது.
இதையடுத்து, தலைநகரில் கொழும்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி முழக்கமிட்ட அவர்கள், நாட்டின் பொருளாதாரத்தை ராஜபக்சே குடும்பத்தினர் அழித்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர்.
மேலும், ராஜபக்சே அரசு பதவி விலகும் வரை போராட்டத்தை நடத்த முடிவு செய்திருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தியா வந்துள்ள இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபட்ச, டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். இதையடுத்து, இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.