• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இலங்கை பிரதமராக ராஜபக்சேவை நியமித்தது ஏன்? சிறிசேனா விளக்கம்

இலங்கை பிரதமராக ராஜபக்சேவை நியமித்தது ஏன்? சிறிசேனா விளக்கம்

மைத்ரிபால சிறிசேனா

மைத்ரிபால சிறிசேனா

தன்னை கொல்ல நடந்த சதியில் மூத்த அமைச்சர்களில் ஒருவருக்கு தொடர்பிருந்ததாகவும் சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இலங்கை பிரதமராக ராஜபக்சேவை நியமித்தது ஏன் என்பது குறித்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார். தன்னை கொல்ல நடந்த சதியில் மூத்த அமைச்சர்களில் ஒருவருக்கு தொடர்பிருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை திடீரென நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்தார். சட்டரீதியாக தானே பிரதமர் என ரணில் கூறி வரும் நிலையில், அரசு நிர்வாகத்தில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ரணிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதோடு அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை, ரணிலுக்கான சிறப்புரிமைகள் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சபாநாயகரான தன்னிடம் கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது தவறு என்றும் கரு ஜெயசூர்யா எச்சரித்துள்ளார்.

இதனிடையே தனது அதிரடி அரசியல் முடிவுகள் தொடர்பாக அதிபர் சிறிசேன இலங்கை மக்களுக்கு உரையாற்றினார். அதில் ரணில் விக்கிரமசிங்கே தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாலேயே பிரச்சனை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். தன்னை கொல்ல நடந்த சதியில் இலங்கை அமைச்சர் ஒருவருக்கும் பங்கு இருந்ததாக குற்றம் சாட்டிய அவர், சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படியே ரணிலை பதவிநீக்கம் செய்யததாக குறிப்பிட்டுள்ளார்.

அதிபரால் நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இலங்கை அரசியல் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இதனிடையே அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இலங்கையில் ஜனநாயக மாண்புகளும், அரசியலமைப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படும் என நம்புவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. நட்பு அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் தொடரும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: