முகப்பு /செய்தி /உலகம் / பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் மகிந்தா ராஜபக்சே - இலங்கை அரசியலில் திருப்புமுனை..

பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் மகிந்தா ராஜபக்சே - இலங்கை அரசியலில் திருப்புமுனை..

மகிந்தா ராஜபக்சே

மகிந்தா ராஜபக்சே

Srilanka PM Mahinda Rajapakse: இலங்கை அரசியலில் முக்கிய திருப்புமுனையாக பிரதமர் பதவிலிருந்து மகிந்தா ராஜபக்சே விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்தா ராஜபக்சே விலகவுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். தலைநகர் கொலும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதை தெரிவித்தார்.

தற்போதைய அதிபரும், மகிந்தாவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சேவுடன் எதிர்கட்சிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய அரசை உருவாக்க கோத்தபய ஒத்துக்கொண்டதாகவும், இதில் மகிந்தா இடம் பெற மாட்டார் எனக் கூறியதாகவும் சிறிசேனா கூறினார். அத்துடன், புதிய அமைச்சரவையில் 20 உறுப்பினர் இருப்பார்கள் எனவும், அனைத்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய கவுன்சில் உருவாக்கப்பட்டு, அந்த அமைப்பு முக்கிய முடிவுகள் எடுக்கும் என அவர் கூறினார்.

சிறிசேனாவில் இந்த அறிவிப்பு இலங்கை அரசியலில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை பிரச்னை, விலைவாசி உயர்வு ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்தது. அந்நாட்டின் அந்நிய செலாவணி முற்றிலும் காலியான நிலையில், ராஜபக்சேக்கள் ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதை சமாளிக்க மற்ற குடும்ப உறுப்பினர்களை அரசில் இருந்து அப்புறபடுத்திய கோத்தபயா, மகிந்தாவை மட்டும் பிரதமராக நீட்டிக்க செய்தார். மகிந்தா பதவியில் இருந்து விலக மாட்டேன் என விடாப்பிடியாக இருந்துவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையில் இருந்து பின் வாங்கவில்லை.

தான் பிரதமராக நீடிக்க எம்பிக்கள் ஆதரவு இருப்பதாக மகிந்தா தரப்பு தொடர்ந்து கூறிவந்தது. அத்துடன் மகிந்தாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபக்சே, 'பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்தால் கோத்தபய தானே பதவி விலக வேண்டும். உடம்பு வலி ஏற்பட்டால், அதற்கு தலை வலி மருந்து வழங்குவதில் என்ன பிரயோஜனம்' என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: பொருளாதார தடை விதித்த ரஷ்யாவிடம் இருந்தே எரிபொருள் இறக்குமதி - பலே நேட்டோ நாடுகள்

ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்தை தொடர்ந்து மகிந்தாவை நீக்கும் முடிவை கோத்தபயா எடுத்துள்ளது இலங்கை அரசியலில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த முடிவை மகிந்தா ஏற்பாரா அல்லது போர்க்கொடி தூக்குவாரா என எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் பொருளாதார உதவி செய்துவரும் நிலையில், இந்தியாவும் இலங்கையில் ஏற்படும் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறது.

First published:

Tags: Mahinda Rajapakse, Srilanka