இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களாக அவசர நிலை அமலில் இருந்த நிலையில், தற்போது அந்நாட்டு அரசு அவசர நிலையை திரும்பப் பெற்றது. நேற்று நள்ளிரவு முதல் அவசர நிலை திரும்பப் பெறப்படுவதாக அதிபர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை மேம்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிபர் கோத்தபயா ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் அந்நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக கையாண்டதாக புகார் கூறி அங்கு மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த போராட்டத்தில் 9 பேர் கொல்லப்பட்ட நிலையில், 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
போராட்டத்தின் தீவிரத்தால் அச்சமடைந்த இலங்கை அரசு மே 6ஆம் தேதி அவசர நிலை அறிவித்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இருப்பினும் போராட்டக்காரர்களின் அழுத்தத்தை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்தா ராஜபக்சே ராஜினாமா செய்தார். இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றார். ரணிலுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அத்துடன் இலங்கையின் சூழலை ஆராய்ந்து மேம்படுத்த பல்வேறு குழுக்களை ரணில் நியமித்துள்ளார். இதனால், கடந்த இரு வாரங்களாக கொதி நிலையில் இருந்த இலங்கை மெல்ல அமைதி நிலைக்கு திரும்புகிறது. எனவே, அரசு அவசர நிலையை திரும்பப் பெற்றுள்ளது.
இலங்கையில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவைச் சார்ந்துள்ள நிலையில், கோவிட் பெருந்தொற்று லாக்டவுன் காரணமாக அங்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கே தட்டுப்பாடு நிலவிவருகிறது.
இதையும் படிங்க:
கோவிட் இல்லை என்றாலும் கட்டாய தனிமை - அரசிடம் சிக்கி தவிக்கும் சீன மக்கள்
அந்நிய செலாவணி கையிருப்பும் பற்றாக்குறையில் உள்ளதால் இந்த சிக்கலில் இருந்து மீண்டு வர மேலும் சில காலம் பிடிக்கும் என புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் ரணில் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.