இலங்கையில் 2019-ஆம் ஆண்டு ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தத் தவறியமைக்காக, அப்போது அதிபராக இருந்த மைத்ரிபால சிறிசேனாவுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் ரூ.10 கோடி அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
உலகம் முழுவதும் ஈஸ்டர் தினம் இன்று கொண்டாடப்பட்டாலும், இலங்கைக்கு 2019 முதல் அந்த நாள் ஒரு கறுப்பு நாளாகவே மாறிவிட்டது. 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி கொண்டாடப்பட்ட ஈஸ்டர் தினத்தன்று, மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 277 பேர் உயிரிழந்திருந்தனர். 400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இலங்கையில் இதுபோன்ற தாக்குதல் நடக்கவுள்ளதாக ஏப்ரல் 4ஆம் தேதி இந்திய உளவுத்துறை இலங்கையை எச்சரித்திருந்தது. ஆனால் அதை உதாசீனம் செய்ததால் இந்த நிகழ்வு நடந்ததாக அந்நாட்டு நீதிமன்றம் கருதுகிறது.
நாட்டின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றான ஈஸ்டர் தாக்குதல் குறித்து நம்பகமான தகவல்கள் இருந்தும், அதைத் தடுப்பதில் அலட்சியமாக இருந்தது மட்டுமின்றி மக்களின் அடிப்படை உரிமைகளை அந்த அரசாங்கம் மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் ஏழு பேர் கொண்ட அமர்வு தனது தீர்ப்பில் தீர்ப்பளித்தது.
அதற்காக அப்போது அதிபராக இருந்த மைத்ரிபால சிறிசேனாவுக்கு 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், இதே காரணத்துக்காக காவல்துறை முன்னாள் தலைவா் புஜித் ஜெயசுந்தர, மாகாண உளவுத் துறை முன்னாள் தலைவா் நளிந்த ஜெயவா்த்தனே ஆகியோருக்கு தலா ரூ.7.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை முன்னாள் செயலா் ஹேமஸ்ரீ ஃபொ்னாண்டோவுக்கு ரூ.5 கோடி மற்றும் தேசிய உளவுத் துறை முன்னாள் தலைவா் சிசிரா மெண்டிஸுக்கு ரூ.1 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக 6 மாதங்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இழப்பீடு தொகையை சம்பந்தபட்டவர்கள் அவர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இழப்பீடு வழங்குவது குறித்து 6 மாதங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.