இலங்கையில் இரண்டு நாள்களாக கலவரமான சூழல் நிலவி வரும் நிலையில், கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பொது சொத்தை திருடி சூறையாடுபவர்கள், பிறர் மீது வன்முறையை ஏவிவிடுபவர்களை சுட்டுத்தள்ள பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் போராட்டக்காரர்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. எதிர்ப்பு தீவிரமானதை அடுத்து மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால், மகிந்தாவின் ராஜினாமாவுக்குப் பின்னரும் அங்கு போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஆளும் கட்சி உறுப்பினர்களின் வீடுகள், உடமைகள் சூறையாபடப்படும் நிலையில், அரசுக்கு ஆதரவாளர்களை போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கி வருகின்றனர். மகிந்த ராஜபக்சே தனது வீட்டை விட்டு வெளியேறி திரிகோணமலையில் உள்ள கப்பல் படை தளத்தில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளார்.
ஆனால், திரிகோணமலை பகுதியிலும் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் அமைதியை நிலை நாட்ட வன்முறையை கைவிட வேண்டும் என அதிபர் கோத்தபயா ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் சாசனத்தின் படி நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை கொண்டுவரப்பட்டு பொருளாதார பிரச்னை சீர் செய்யப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க:
மகிந்த ராஜபக்சவின் 50 ஆண்டு கால அரசியல்.. வளர்ச்சியும்.. வீழ்ச்சியும்..
ஆனால் அங்கு வன்முறை போராட்டம் தொடர்ந்து வருவதை அடுத்து, கலவரக்காரர்களை கண்டதும் சுட பாதுகாப்பு அமைச்சகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.