இலங்கையில் முப்படை தளபதிகளை மாற்ற அதிபர் திட்டம்!

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: April 24, 2019, 10:06 AM IST
இலங்கையில் முப்படை தளபதிகளை மாற்ற அதிபர் திட்டம்!
இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா.
Web Desk | news18
Updated: April 24, 2019, 10:06 AM IST
இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக முப்படை தளபதிகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். இதனிடையே குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு முன் தற்கொலைப்படையினர் உறுதி மொழியேற்ற வீடியோ காட்சிகளை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 359 ஆக உயர்வு

இலங்கையில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் அடுத்தடுத்து குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். செபஸ்டியன் தேவாலயத்தில் நிகழ்ந்த தாக்குதலில் உயிரிழந்த 110 பேரின் சடலங்களும் இறுதிசடங்குகளுக்கு பின் அடக்கம் செய்யப்பட்டன.


அவசர நிலை தீர்மானத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல்

தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த அவசரநிலை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்காக நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், பேசிய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ருவன் விஜேவர்த்தனே, பிரதமரை மாற்றுவதற்காக கடந்த அக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, எந்தவொரு பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திலும் தன்னையும், பிரதமரையும் அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

Loading...

இதன்காரணமாகவே, உளவுத்துறை எச்சரிக்கை தங்களது கவனத்துக்கு வரவில்லை என்று கூறினார். இதற்கு பின் அவசரநிலை தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

புனித செபாஸ்டியன் தேவாலயத்துக்கு சென்றார் சிறிசேனா

இதனிடையே, அதிபர் சிறிசேனா நீர்க்கொழும்பு பகுதியில் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு உள்ளான புனித செபாஸ்டியன் தேவாலயத்துக்கு சென்று சேதங்களை பார்வையிட்டார்.

அப்போது, தேவாலயத்தில் மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு ராணுவத்துக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளதாக அவர் கூறினார். இதுபோன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்ற அவர், இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

முப்படை தளபதிகளை மாற்ற முடிவு

இதற்கு பின்னர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அதிபர் சிறிசேனா, தொடர் தாக்குதல் சம்பவத்தை கட்டுப்படுத்த தவறியதால் முப்படைகளின் தளபதிகளை விரைவில் மாற்ற உள்ளதாகக் கூறினார். மேலும், காவல்துறை, பாதுகாப்புத்துறையில் ஒருவார காலத்திற்குள் முழு அளவில் மாற்றம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்தார்.

தாக்குதல் சம்பவம் குறித்த வெளிநாட்டு உளவு அமைப்புகள் அளித்த எச்சரிக்கைகளை பாதுகாப்புத்துறையினர் தனது கவனத்திற்கு கொண்டுவரவில்லை என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிபரி சிறிசேனா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தற்கொலைப்படையினரின் பெயர்கள் வெளியீடு

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. அத்துடன் தற்கொலைப்படையில் இடம்பெற்றவர்களின் பெயர் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

அபு உபயத, அபு அல் முக்தர், அபு கலீல், அபு கம்சா, அபு அல் பாரா, அபு முகமது மற்றும் அபு அப்துல்லா ஆகியோர் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளதாகவும் ஐஎஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாதிகள் உறுதி மொழியேற்பு

மேலும், தாக்குதலை அரங்கேற்றுவதற்கு முன்னதாக தற்கொலைப்படையினர் 7 பேரும் குழுவாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் தாக்குதலுக்கு முன் உறுதி மொழியேற்ற வீடியோ பதிவுகளையும் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

தேவாலயத்திற்குள் நுழையும் தாக்குதல் நடத்திய நபர்

இதற்கிடையே, நெகொம்போவில் உள்ள செபஸ்டியன் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட நபர், தாக்குதல் நடத்துவதற்கு முன் தேவாலயத்தை நோக்கி நடந்து செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.



Also see... குண்டுவெடிப்பால் ஏற்பட்ட சேதங்களை சிறிசேனா பர்வையிட்டார்.


Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...