இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அவசர நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே திரும்பப் பெற்றுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்தா ராஜபக்சேவும் பதவிவிலகக் கோரி, நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, கடந்த ஒன்றாம் தேதி அவசரநிலையை அதிபர் பிறப்பித்தார்.
எனினும், தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமரின் இல்லத்தை நோக்கி மாணவர்கள் நேற்று பேரணியாக சென்றனர். இதேபோல, வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி மேற்கொண்டனர். மேலும், சமையல் கலைஞர்களும் போராட்டம் நடத்தினர்.
ரஷ்யா தாக்குதல்: குழந்தையின் முதுகில் குடும்ப விவரங்கள்.. மனதை கனக்க வைக்கும் உக்ரைன் தாய்மார்களின் பதிவுகள்!
அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்த நிலையில், 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சாப்ரி, 24 மணிநேரத்துக்குள் பதவி விலகினார். நாடாளுமன்றம் நேற்று கூடிய சூழலில், அரசுக்கு அளித்துவரும் ஆதரவை 41 எம்.பி.க்கள் வாபஸ் பெற்றனர். இதனால், அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
நாடாளுமன்றம் இன்றும், நாளையும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அரசியல் தலைவர்கள் கூட்டத்தில், அதிபர் பதவிவிலக வேண்டும் அல்லது இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவசர நிலையை நேற்றிரவு முதல் திரும்பப் பெறுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக, நார்வே, ஈராக் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய பகுதிகளில் உள்ள தங்களது நாட்டின் தூதரகங்களை வரும் 30-ம் தேதி முதல் மூட வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.