இலங்கையின் பிரதமராக ரணில் விக்கரமசிங்கே பதவியேற்ற பின் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் நிலவிவரும் நிலையில், கடந்த வாரம் அந்நாட்டின் பிரதமராக ரணில் மீண்டும் பதவியேற்றார்.
நாட்டு மக்களிடம் அவர் ஆற்றிய உரையில், "நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு நாளைக்கு தேவையான ஸ்டாக்கே தற்போது உள்ளது. பெட்ரோல், கச்சா எண்ணெய் போன்றவற்றை இற்குமதி செய்ய தேவையான அமெரிக்க டாலர் கையிருப்பு இலங்கை அரசிடம் இல்லை. அடுத்த சில மாதங்கள் நாம் மிகவும் கடினமான காலம். உண்மையை மக்களிடம் மறைப்பதை நான் விரும்பவில்லை.
கடந்த பட்ஜெட்டில் இலங்கை ரூபாய் மதிப்பில் 2.3 ட்ரில்லியன் வருவாய் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1.6 ட்ரில்லியன் வருவாய் தான் கிடைத்துள்ளது. எனது நோக்கம் நாட்டை காப்பாற்றுவது மட்டுமே. தனி நபரையோ, குடும்பத்தையோ ஒரு குழுவையோ நான் காப்பாற்ற நினைக்கவில்லை. தேவைக்கேற்ப பணம் அச்சடிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதற்கு விருப்பம் இல்லை என்றாலும், வேறு வழியில்லை. நஷ்டத்தில் இயங்கும் இலங்கை ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், போராட்டக்காரர்களின் அழுத்தம் காரணமாக மகிந்தா ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்து தலைமறைவானார்.
இதையும் படிங்க:
தலைமறைவான மகிந்தா ராஜபக்சே - திரிகோணமலையில் திரும்பிய வரலாறு
இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பதவியேற்றார். இவருக்கு மற்றொரு எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச ஆதரவு தெரிவித்துள்ளார். 1993 முதல் இலங்கையின் பிரதமராக ஏற்கனவே 5 முறை பிரதமர் பதவி வகித்தவர் ரணில் விக்கிரமசிங்க (73), இலங்கை அரசில் பழுத்த அனுபவம் கொண்டவராவர். இவர் பதவியேற்ற அடுத்த நாளே நாட்டின் அடிப்படை பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்க்க பிரத்யேக குழுக்களை நியமித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.