இலங்கையில் தாமரை மலர்ந்தது - ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

  • Share this:
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ராஜபக்ச சகோதரர்களின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி இதுவரை மூன்றில் இரண்டு மடங்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையின் 9-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. 196 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், 7452 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

12985 வாக்குச்சாவடிகளில் மக்கள் முகக்கவசம் அணிந்து சென்று வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் மொத்தமாக 70 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

மகிந்த ராஜபக்சவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி தாமரை மொட்டு சின்னத்திலும் , ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்திலும் போட்டியிட்டன. அதேபோல் சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளும் களம் கண்டன.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. பிற்பகலில் வெளியான தபால் வாக்கு முடிவுகளில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

கொழும்பு, கண்டி, ரத்தினபுரா, நுவரேலி, புத்தளம் மற்றும் திரிகோணமலை உள்ளிட்ட 13 தொகுதிகளில் ராஜபக்ச சகோதரர்களின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. திகமதுல்லா உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் சஜித் பிரமதேசாவின் ஐக்கிய மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி, ராஜபக்சவுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள ராஜபக்ச, இரு நாடுகள் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பை இன்னும் மேம்படுத்த, இலங்கை மக்களின் வலுவான ஆதரவுடன் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிக முதலீடுகளை செய்திருக்கும் சீனாவுக்கு, ராஜபக்ச கட்சியின் மாபெரும் வெற்றி சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது. இலங்கையுடன் சீனாவும், இந்தியாவும் நட்பு பாராட்டினாலும், ராஜபக்ச இந்தியாவை தனது குடும்ப உறுப்பினராகவும், சீனாவை நண்பராகவும்தான் பார்த்து வருகிறார்.

அதேவேளையில், இலங்கையில் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் களைக்கட்டியிருக்கின்றன. ராஜபக்சவிஒன் அமைச்சரவையில் அவரது மகன் நமல் ராஜபக்சேவுக்கு முக்கிய பொறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் என அனைத்து பிரிவினருக்கும் வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Published by:Yuvaraj V
First published: