முகப்பு /செய்தி /உலகம் / இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடணம்.. இடைக்கால அதிபர் ரணில் அறிவிப்பு

இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடணம்.. இடைக்கால அதிபர் ரணில் அறிவிப்பு

இலங்கையில் மீண்டும் அவசர நிலை

இலங்கையில் மீண்டும் அவசர நிலை

Srilanka Crisis : இலங்கையில் மக்கள் போராட்டத்தின் காரணமாக அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிறப்பித்து இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். இந்த அவசர நிலை உத்தரவு நேற்று நள்ளிரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள உத்தரவில், 'பொது அமைதியை பாதுகாக்கவும், சட்ட ஒழுங்கை கடைபிடிக்கவும், அத்தியாவசிய பொருள்கள், சேவைகள் விநியோகத்தை முறையாக வைத்திருக்கவும் இந்த அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன சட்டப் பிரிவு 40(1)(c)இன் அடிப்படையில் அதிபருக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றின் எதிரொலியாக மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரிசி, கோதுமை போன்ற உணவு பொருள்களின் தட்டுப்பாடு, கடுமையான மின்வெட்டு, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இந்த சூழலுக்கு இலங்கை அரசின் மோசமான கொள்கைகளும் ஊழல் நிரம்பிய ஆட்சியே காரணம் என்ற புகாரில் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகையை மக்கள் முற்றுகையிட்டு சூறையாடினர்.

மக்கள் போராட்டத்தின் காரணமாக அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். தனது பதவியை கோத்தபய ராஜினாமா செய்த நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார். புதிய அதிபர் தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆளும் கட்சி சார்பில் வேட்பாளராக ரணில் முன்னிறுத்தப்படுகிறார். இந்த நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும், இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், டீசல் மற்றும் பெட்ரோல் சில்லறை விலைகளை லிட்டருக்கு தலா ரூ.20 குறைத்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல், ஐந்து முறை விலை உயர்வுக்கு பிறகு தற்போது விலை குறைந்துள்ளது.

இதையும் படிங்க: வெப்பக் காற்றால் திணறி வரும் ஐரோப்பிய நாடுகள்.. கட்டுக்கடங்காத காட்டுத்தீ.. நூற்றுக்கணக்கில் மக்கள் உயரிழப்பு

இலங்கையில் நிலைமை சீரடைய அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. அந்நாட்டிற்கு பல்வேறு உதவிகளை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் விளக்கமளிக்கவுள்ளனர்.

First published:

Tags: Ranil Wickremesinghe, Sri Lanka, Sri Lanka political crisis, Sri Lanka President