Home /News /international /

அந்நிய செலாவணி பற்றாக்குறை, உணவுப் பொருள் அவசரநிலை - நெருக்கடியிலிருந்து மீண்டெழுமா இலங்கை

அந்நிய செலாவணி பற்றாக்குறை, உணவுப் பொருள் அவசரநிலை - நெருக்கடியிலிருந்து மீண்டெழுமா இலங்கை

இலங்கை

இலங்கை

இலங்கை நாடு, உணவுப் பொருள் அவசர நிலை மற்றும் அந்நியச் செலாவணி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் முதுகலைப் பொருளாதாரம் படிக்கும் தனது மகளுக்கு இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த இலங்கையைச் சேர்ந்த சிராணி சேனநாயகே என்பவர் பணத்தை அனுப்ப முயற்சி செய்தார். கொழும்புவில் இருக்கும் வங்கியிலிருந்து 3,000 அமெரிக்க டாலர் பணத்தை அவரால் அனுப்ப முடியவில்லை. வங்கியில் நீண்ட வரிசை இருந்ததால் அவரை காத்திருக்கச் சொன்னது வங்கி. விரக்தி அடைந்த அந்த அம்மா, நேரடியாக பணத்தை அனுப்பவதைத் தவிர தனக்கு வேறு ஏதும் வாய்ப்புகளும் இல்லை என்று சொன்னார்.

பெரும்பாலும் இலங்கையிலுள்ள அனைத்து வங்கிகளும் வெளிநாட்டு பணம் அல்லது அந்நியச் செலாவணி முற்றிலும் இல்லாத நிலையை எதிர்கொண்டுள்ளன. வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு உச்சவரம்பை அந்நாட்டு அரசு நிர்ணயித்துள்ளது. தினமும் எண்ணற்ற மக்கள் வங்கிக்கு வந்து அவசரத் தேவைக்காக அமெரிக்க டாலர் பணத்தை பெறுவதற்கு காத்துக்கிடக்கின்றனர்.

கொரோனா மூன்றாவது அலை மற்றும் தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக தீவு நாடான இலங்கை மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இலங்கை நாட்டில் இருக்கும் வெளிநாட்டு பணத்தின் இருப்புஅளவு மிகவேகமாக குறைந்துவருகிறது. இலங்கைக்குள் வரும் வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிடுகையில் வெளியே செல்லும் பணத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது. சுழல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கோத்தபய ராஜபக்ச அரசாங்கம் உணவு அவசரநிலையைக் கொண்டுவந்துள்ளது. இலங்கை அரசு இறக்குமதியின் மீது மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குறிப்பாக, வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், டைல்ஸ், வீட்டு உபயோகப் பொருள்கள், செல்போன் உள்ளிட்ட உதிரிபாகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருள்களை இறக்குமதி செய்வதற்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன், காரணமாக இலங்கையில் தொழில்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சந்தேகத்திற்குரிய வேறுபாடு உள்ளது.

உலக வங்கியின் கூற்றுப்படி, ஒட்டுமொத்த தெற்கு ஆசியாவிலும் இலங்கை மட்டும்தான் உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாகும். இலங்கையில் மட்டும் 100 சதவீத படிப்பறிவு மற்றும் உயர் தரத்தில் மனிதவள குறியீடுகள் உள்ளன. ஜனவரி 2020-ம் ஆண்டு இலங்கை மக்களின் எதிர்காலம் சிறப்பாக இருந்தது. அதிலிருந்து ஒரு மாதத்தில் கொரோனா உலகைத் தாக்கியது. அதனால், இலங்கையில் சாதாரண மக்களின் வாழ்க்கை ஒரு நாள் இரவில் தலைகீழானது.

இலங்கை


கொரோனா முதல் அலையை இலங்கை அரசு சிறப்பாக கையாண்டபோதிலும், இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலை அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா வகை திரிபு வைரஸால் இலங்கை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இலங்கையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் அந்நாட்டின் மதிப்புமிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மற்றும் நிதியமைச்சர் மங்களா சமரவீரா. சுமார் 2.2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இலங்கை அதிக அளவில் இறக்குமதியைச் சார்ந்துள்ளது. அந்நாட்டுக்கு தேவையான உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இலங்கையில் போதுமான அளவில் உற்பத்தி தொழிற்சாலைகள் இல்லை. பெரும்பாலான பொருள்கள் இறக்குமதியே செய்யப்படுகின்றன. உலக அளவில் மிகச் சிறந்த 10 சுற்றுலா நாடுகளில் இலங்கையும் ஒன்றாக கருதப்படுகிறது. இலங்கைக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் மக்கள் சுற்றுலாவுக்காக வருகை தருகின்றனர். சுற்றுலாத்துறை இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத பங்குவகித்தாலும் அதன் மூலம் ஆண்டுதோறும் 400 கோடி அமெரிக்க டாலர் பணம் ஈட்டுவதன் மூலம் 30 லட்சம் மக்கள் பலன் பெறுகின்றனர்.

சுற்றுலாத்துறை ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. இந்தப் பேரழிவிலிருந்து தங்களை மீட்கும் அதிசயத்துக்காக சுற்றுலாத்துறை தொழிலைச் சார்ந்தவர்கள் காத்துக்கொண்டுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த கொழும்புவில் ஹோட்டல் நடத்தும் உரிமையாளர், ‘இதே நிலை இன்னமும் 6 மாதங்களுக்கு நீடித்தால் 50 சதவீத சுற்றுலாத்துறை நிரந்தரமாக மூடப்படும் நிலை உருவாகும். அதனால் லட்சக்கணக்கானவர்கள் வேலையிழப்பார்கள். இது மிகவும் அச்சம் தரும் சூழ்நிலை. இது நேரடியாக பணம் புழங்கும் துறை. தற்போது பணப் புழக்கம் முற்றிலும் நின்றுள்ளது’ என்று தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து டீ, லவங்கப்பட்டை, மசாலாப் பொருள்கள், கடல் உணவுப் பொருள்கள், ரத்தினங்கள், துணிகள் மேற்குநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்மூலம் ஆண்டுக்கு 600 கோடி டாலர் வெளிநாட்டு பணம் சம்பாதிக்க முடிந்தது. கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உலக அளவில் வாங்குவோரின் எண்ணிக்கை மிக அதிக அளவில் குறைந்தது. அதனால், இந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் தேவையும் குறைந்துள்ளது. கொரோனாவின் காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மோசமான நிலையை சமாளிக்க இலங்கையின் அரசின் மத்திய வங்கி இந்தியா, சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் பணத்தை மாற்றித் தரும் முயற்சியில் இறங்கியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உணவு அவசரநிலையை அமல்படுத்தியது உணவுப் பொருள்களைப் பதுக்கும் கருப்புச் சந்தையின் கதவுகள் திறப்பதற்கு காரணமாக அமைந்துவிட்டது. அதனால், சாதாரண மக்களின் நிலை இன்னமும் மோசமாகியுள்ளது.

இலங்கையில் நிலவும் பிரச்னை குறித்து தெரிவித்த தொழிலதிபர் ஒருவர், ‘நாங்கள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழிலில் உள்ளோம். சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நாங்கள் தகடுகளை இறக்குமதி செய்கிறோம். பணத் தடுப்பாட்டின் காரணமாக எங்களால் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்ப முடியவில்லை. எங்களுடைய தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது நாங்கள் வெளிநாட்டு வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை அனுப்பும் வழிகளை கடைபிடித்துவருகிறோம். இங்கு மிகவும் குழப்பான நிலை உள்ளது’ என்று தெரிவித்தார்.

வெளிநாட்டு பணத்தை கையாளுவும், வங்கிகளுக்கு இடையில் பணத்தை மாற்றுவதற்கான பண விகித்தையும் நிர்ணயிக்கும் அதிகாரத்தை வங்கிகளுக்கு அளிக்கும் அதிகாரம் இலங்கையின் மத்திய வங்கியிடம் உள்ளது. இலங்கை அரசின் பணமான எல்.கே.ஆர் மூலம் ஒரு அமெரிக்க டாலர் பணத்தை வாங்குவதற்கு 230 எல்.கே.ஆரைக் கொடுக்கவேண்டும். இந்தியப் பணமான ஒரு ரூபாயை வாங்குவதற்கு 3 எல்.கே.ஆரைக் கொடுக்கவேண்டும்.

இதுகுறித்து தெரிவிக்கும் இறக்குமதி ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் ஒருவர், ‘இலங்கையின் மத்திய வங்கி அதனுடைய முதன்மைப் பொறுப்பிலிருந்து தவறவிட்டது போல தெரிகிறது. தற்போது வங்கிகள் தனியார் நிதிநிறுவனம் போல செயல்படுகிறது. இது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது’ என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் மிகக் கடுமையாகச் சென்றாலும், இலங்கைக்கு இது தற்காலிக பின்னடைவு என்று மக்கள் இன்னமும் நம்பிக்கையுடனும் சிரித்த முகத்துடனும் உள்ளனர். இதுகுறித்து தெரிவித்த சுற்றுலாத்துறை மூத்த வல்லுநர் சந்தனா அமரதாசா, ‘நாங்கள் மீண்டெழுகிற சமூகம். கடந்த காலங்களில் இதைவிட மோசமான நிலையைச் எதிர்கொண்டுள்ளோம். 1970-ம் ஆண்டுகளில் நாங்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மார்க்ஸிஸ்ட் ஜேவிபியின் வன்முறை இயக்கம், 30 ஆண்டு கால மோசமான உள்நாட்டு போர், 2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவு, சமீபத்தில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு என்ற பல மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளோம். எல்லாப் பிரச்னைகளுக்குப் பிறகும் நாங்கள் வலிமையாக எழுந்துவருவோம். விரைவில் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கையுள்ளது. நாங்கள் உறுதியாக மீண்டெழுவோம்’ என்று தெரிவித்தார்.

(தமிழில்: கார்த்திக்)
Published by:Karthick S
First published:

Tags: Sri Lanka

அடுத்த செய்தி