இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி அவரது அலுவலகம் எதிரே ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில், எரிபொருட்களின் விலை நேற்று முன் தினம் கடுமையாக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அதன் ஒருபகுதியாக தலைநகர் கொழும்பையும், முக்கிய நகரான கண்டியை இணைக்கும் ரம்புக்கனா என்ற இடத்தில் 8 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் டயர்களை தீயிட்டு கொளுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரியை தீயிட்டு கொளுத்த முயன்றதாக தெரிகிறது. அப்போது, போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போலீசார் கலைத்தனர்.
இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் தாக்கியதில் 8 காவலர்கள் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ரம்புக்கனா காவல்நிலைய பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைதுசெய்யும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Read More : மூன்று பேரில் ஒருவரை விரட்டும் நீண்ட கால கொரோனா பாதிப்பு - அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இலங்கையில் மக்கள் போராட்டம் தொடங்கியதில் இருந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது இதுவே முதன்முறையாகும். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரம்புக்கன்னாவில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக காவல்துறை விரிவான அறிக்கை அளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.