இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதிபர் மற்றும் பிரதமர் பதவிவிலக வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் விலகிய நிலையில், போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்ச-வின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ராஜபக்ச குடும்பத்தினரின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சவும், அவரது குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. திரிகோணமலை கடற்படை தளத்தில் உள்ள முகாமில் மகிந்த ராஜபக்சவும், அவரது குடும்பத்தினரும் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியானதால், அங்கு திரண்ட போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
Also Read: கலவரம் செய்பவர்களை சுட்டுத்தள்ள இலங்கை அரசு உத்தரவு
இந்நிலையில் அதிபர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மல்வானை பகுதியில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட டிஐஜி தேசபந்து தென்னக்கோனை போராட்டக்காரர்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
தங்கல்லே பகுதியில் ராஜபக்ச-க்களின் தந்தை டிஏ ராஜபக்ச-வின் சிலையை கீழே தள்ளி போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர். கடந்த 2 தினங்களாக நடந்த வன்முறை சம்பவங்களில் ஆளும் கட்சி எம்.பி., உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். 220-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 47 வாகனங்கள் மற்றும் 38 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதாகவும், 41 வாகனங்கள் மற்றும் 65 வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
Also Read: வீட்டைவிட்டு வெளியேறி திரிகோணமலையில் தஞ்சம் புகுந்த மகிந்த.. விடாமல் துரத்தம் போராட்டக்காரர்கள்
பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள கோத்தபய ராஜபக்ச, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும், அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு ஒருமித்த கருத்து அடிப்படையில் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
வன்முறை நீடித்துவரும் நிலையில், இன்று காலை 7 மணியுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கை, நாளை காலை 7 மணிவரை நீட்டித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவோர் அல்லது தனிப்பட்ட முறையில் தாக்குவோரை சுட்டுத்தள்ள முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில், அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகினால், ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் தயார் என்று சமாகி ஜனா பலவேக்யாயா கட்சி எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.மேலும், மனிதநேயமற்ற தாக்குதலுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச, மகிந்தா ராஜபக்ச உள்ளிட்ட இந்த அரசில் உள்ள அனைவரும் பொறுப்பு என்று சமாகி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸா கூறியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையிலிருந்து சில அரசியல் தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் இந்தியாவுக்கு வந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இதில் உண்மை எதுவும் இல்லை என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.