இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதனை தொடர்ந்து நிலவும் அசாதாரண சூழல் காரணமாக நாடு முழுவதும் அவசர நிலையை பிறப்பித்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எரிபொருட்கள் பற்றாக்குறையால் தினமும் 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர்.
உடனடியாக பதவி விலக வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர், அப்போது போராட்டக்கார்களில் சிலர் அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றி, ராணுவ வாகனத்திற்கு தீ வைத்தனர். மேலும் வீட்டு சுவரை இடித்து செங்கற்களை போலீசார் மீது வீசி தாக்கியதால், அங்கு போர்க்களம் போல காட்சி அளித்தது.
இதையும் படிங்க: ரஷ்யா - உக்ரைன் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை ஆன்லைனில் மீண்டும் தொடங்கியது...
பொருளாதார நெருக்கடி, மின்வெட்டு போன்றவை காரணமாக இலங்கையில் தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அரசுக்கு எதிராக போராட்டங்களும் வலுபெற தொடங்கியுள்ளதால், அங்கு அதிரடியாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை அமலுக்கு வந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.