இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடும் நிலையில், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவருகின்றன. அதேநேரம், அரசியல்சாசனத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக துணைக் குழுவை அரசு அமைத்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவிவிலக வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. துணை சபாநாயகர் ஏற்கனவே ராஜினாமா செய்த நிலையில், புதிய துணை சபாநாயகரை தேர்வுசெய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்த சூழலில், அரசுக்கு எதிராகவும், அதிபர் கோத்தபய ராஜபக்சே-வுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்க்கட்சிகள் கொண்டுவருகின்றன. இதற்கான ஆவணங்களை நாடாளுமன்ற சபாநாயகரிடம் எஸ்ஜேபி கட்சி நேற்று வழங்கியது. இந்த தீர்மானத்தை விரைவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதேபோல, முக்கிய தமிழ் கட்சியும், ரணில் விக்கிரமசிங்கே-வின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர உள்ளன. எனினும், தீர்மானங்கள் மீதான விவாதத்தை தொடங்குவதற்கு ஏழு நாட்கள் பிடிக்கும். இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் 8 நாட்களுக்கு நடைபெறும் என்பதால், அடுத்த வாரத்தில் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.