இலங்கையில் அரசுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வீதிகள் தோறும் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பதற்றம் அதிகரிதுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் அழகான குட்டிதீவாய் இருந்த இலங்கை, தற்போது பெரும் போர்க்களமாய் மாறி வருகிறது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமா மகிந்த ராஜபக்சே தான் வகித்து வந்த பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைதொடர்ந்து வெடித்த வன்முறையால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, குடும்பத்துடன் திரிகோணமலையில் அவர் தஞ்சமடைந்துள்ளார்.
இதனிடையே, கலிமுகதிடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கலைந்து செல்லுமாறு அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நாட்டில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டு, துப்பாக்கிச்சூட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழகங்களை எழுப்பினர்.
தற்போதைய சூழலில் இலங்கையில் ராணுவ ஆட்சி அமலுக்கு வரலாம் என கூறப்படும் நிலையில், தலைநகர் கொழும்புவிலிருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் அனுப்பப்படுகின்றனர். இதன் மூலம் நாடு முழுவதும் போராட்டங்களை ஒடுக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப திட்டமா? மத்திய அரசு விளக்கம்
இதனிடையே, இலங்கையில் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் தற்போது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மூன்றாவது நாளாக இலங்கையில் பெரும்பலான கடைகள் மூடப்பட்டு உள்ளதால், பொதுமகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
நாட்டின் தற்போதைய சூழல் தொடர்பாக விவதிக்க அழைக்கப்பட்டு இருந்த அனைத்துக்கட்சி கூட்டம், பாதுகாப்பு கருதி ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், புதிய அரசு இரண்டு நாட்களில் பொறுப்பேற்கவிட்டால் இலங்கை பொருளாதாரம் மீட்கமுடியா அளவிற்கு நிலைகுலைந்து விடும் என, அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீர்சிங்கே தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால். தனது பதவியை ராஜினமா செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் மோசமான சூழல் தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியொ குட்டாரெஸ் கவலை தெரிவித்துள்ளார். அந்நாட்டில் அமைதி திரும்ப வேண்டும் என, போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
அதேசமயம், இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.