உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்து வரும் நிலையில், இலங்கை திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பேட்டியில், நாட்டில் விவசாயம் செய்வதற்கான உரம் எதுவும் இல்லாததால், நெல் சாகுபடி பருவத்தில் முழு உற்பத்தியும் இருக்காது என கவலை தெரிவித்தார். இதன் காரணமாக, ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்றார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு கடந்த அரசின் நிர்வாகமே காரணம் என குற்றம்சாட்டினார். முன்பு எப்போதும் இல்லாத வகையில் இலங்கை திவாலாகும் நிலைக்கு வந்து விட்டதாகவும், தங்களிடம் டாலரோ, ரூபாயோ இல்லை என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது நிலையான சூழல் இல்லை எனவும், அதிகரித்துள்ள எரிபொருட்களின் விலை மேலும் உயரும் எனவும் கூறியுள்ளார். அதிகரிக்கும் சுமைகளை மக்களால் நீண்ட காலம் சுமக்க முடியாது என்றும், அதிபர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசித்து இலங்கையின் எதிர்காலத்திற்காக நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
பெட்ரோல் வாங்க பணம் இல்லை: பங்குகளில் காத்திருக்க வேண்டாம்- இலங்கை அமைச்சர்
இந்நிலையில், இலங்கையில் புதியதாக நியமிக்கப்பட்ட 9 அமைச்சர்கள், அதிபர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி, கல்வி, சுகாதாரம், சுற்றுலா மற்றும் தொழில் உள்ளிட்ட துறைகளுக்கான அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியதாவது, இலங்கையில் இந்தாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும். தற்போது 30 சதவீதமாகக் காணப்படுகின்ற பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும்.
எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. கடனை மறுசீரமைக்கும் வரை இலங்கை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாது. இதனை கடன் வாங்கியவர்களிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். எனவே அதற்கு முன்கூட்டியே திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.