இலங்கையில் தற்கொலப்படை தாக்குதல் நடத்திய 9 பேரில் 8 பேரின் அடையாளம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் அடுத்தடுத்து குண்டுவெடிப்புத் தாக்குதலை நிகழ்த்தியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359-ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்த 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். செபஸ்டியன் தேவாலயத்தில் நிகழ்ந்த தாக்குதலில் உயிரிழந்த 110 பேரின் சடலங்களும் இறுதிசடங்குகளுக்கு பின் அடக்கம் செய்யப்பட்டன.
தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த அவசரநிலை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்காக நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
படிக்க... கொழும்புவில் பைக்கில் இருந்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு
இதில், பேசிய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ருவன் விஜேவர்த்தனே, பிரதமரை மாற்றுவதற்காக கடந்த அக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, எந்தவொரு பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திலும் தன்னையும், பிரதமரையும் அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இதன்காரணமாகவே, உளவுத்துறை எச்சரிக்கை தங்களது கவனத்துக்கு வரவில்லை என்று கூறினார். இதற்கு பின் அவசரநிலை தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. அத்துடன் தற்கொலைப்படையில் இடம்பெற்றவர்களின் பெயர் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
தாக்குதல்தாரிகள் தேவாலயம், நட்சத்திர விடுதிகளில் நுழைந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. இந்நிலையில், தாக்குதல் நடத்திய 9 தற்கொலைப் படை தீவிரவாதிகளில் 8 பேரின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன் தெரிவித்துள்ளார்.
பார்க்க... இலங்கை குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய சென்னை தம்பதி!
8 பேரில் ஒரு தீவிரவாதி பெண் என்பது கூடுதல் அதிர்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். “தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் சிலர் இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் பட்டப்படிப்பை முடித்துள்ளனர்” என்று அமைச்சர் ருவான் விஜேவர்தன் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்களில் இம்ஷத் அஹ்மெத் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் அஹ்மெத் இப்ராஹிம் ஆகியோர் சகோதரர்கள். இவரது தந்தை முகம்மது யூசுப் இப்ராஹிம், இலங்கையில் மதிக்கத்தக்க தொழிலதிபராக இருந்து வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து விசாரணை நடந்துவருவதாகவும், சில தினங்களில் இலங்கையின் முழு பாதுகாப்பு நிலை உறுதி செய்யப்படும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.