ஹோம் /நியூஸ் /உலகம் /

3 நாட்கள் விண்வெளிச் சுற்றுலா - புதிய அத்தியாயம் படைத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!

3 நாட்கள் விண்வெளிச் சுற்றுலா - புதிய அத்தியாயம் படைத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!

3 நாட்கள் விண்வெளிச் சுற்றுலா - புதிய அத்தியாயம் படைத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!

3 நாட்கள் விண்வெளிச் சுற்றுலா - புதிய அத்தியாயம் படைத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!

விண்வெளியை தொட்டுத் திரும்பிய சமீபகால விண்வெளிப் பயணங்களைத் தொடர்ந்து, முதன்முறையாக மூன்று நாட்கள் விண்வெளிச் சுற்றுலாவுக்கு பயணப்பட்டிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்கு சென்று வந்த காலம் மாறி, பொதுமக்களும் சுற்றுலாவாக விண்வெளிக்கு செல்லலாம் என தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் நிரூபித்துள்ளன.

  கடந்த ஜூலை மாதம் வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தனது முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியது. வர்ஜின் கேலக்டிக் நிறுவன தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் தலைமையிலான குழுவினர் விண்வெளிக்குச் சென்று சில நிமிடங்கள் மிதந்து விட்டு பூமிக்குத் திரும்பினர். அதன் பின்னர் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்கலம் மூலமாக, அந்நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ் விண்வெளிக்குச் சென்று திரும்பினார்.

  இந்த வரிசையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க்கும் விண்வெளிப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க சுற்றுலாப் பயணிகளை கொண்ட குழுவினரை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்திருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

  இன்ஸ்பிரேஷன் 4 என்று பெயரிடப்பட்ட இந்த பயணத்தின் செலவு முழுவதையும் அமெரிக்க கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன் ஏற்றுக் கொண்டுள்ளார். தன்னுடன் பயணம் செய்யும் வாய்ப்பை சாமானியர்களுக்கு அளிக்க விரும்பிய இவர், முன்னுதாரணமாக விளங்கும் சிலரை தேர்ந்தெடுக்க போட்டி ஒன்றையும் நடத்தினார்.

  இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் 29 வயதான ஹேலி ஆர்சனாக்ஸ் (Hayley Arceneaux), சிறு வயதில் எலும்புப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர். தனக்கு சிகிச்சையளித்து குணமடையச் செய்த செயின்ட் ஜூட் குழந்தைகள் ஆய்வு மருத்துமனையிலேயே தற்போது பணியாற்றி வருகிறார்.

  அடுத்ததாக 2009 ஆம் ஆண்டு நாசாவில் விண்வெளி வீராங்கனையாக தேர்வாவதற்கான வாய்ப்பை கடைசி சுற்றில் நழுவ விட்ட சியான் பிராக்டர் (Sian Proctor) பயணக்குழுவில் இடம் பிடித்தார். நான்காவதாக அமெரிக்க விமானப்படை வீரராக பணியாற்றிய கிறிஸ் செம்ப்ரோஸ்கி ( Chris Sembroski) தேர்வானார்.

  விண்வெளியில், ஈர்ப்பு விசையற்ற இடத்தில் வசிப்பது குறித்த பயிற்சிகள் இவர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக அளிக்கப்பட்டன. இந்திய நேரப்படி இன்று காலை 5.32 மணிக்கு இன்ஸ்பிரேஷன் 4 பயணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

  முன்னதாக விண்வெளிப் பயணத்திற்கு தயாராக வந்த நால்வருக்கும் ஏராளமானோர் திரண்டு நின்று வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து ஜாரெட் ஐசக்மேன் உள்ளிட்ட நால்வரையும் சுமந்து கொண்டு ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கேனவரெல் ஏவுதளத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் விண்வெளிக்குப் புறப்பட்டது.

  இந்த பயணம் முழுவதும் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுகிறது. புறப்பட்ட 12 நிமிடங்களில் விண்கலத்தை சுற்று வட்டப் பாதையில் செலுத்திய ராக்கெட், மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்தது. பொதுவாக 100 கிலோமீட்டர் உயரத்தை தாண்டினாலே அது விண்வெளி என கணக்கிடப்படுகிறது. ஆனால் இன்ஸ்பிரேஷன் 4 குழுவினர் 575 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து பூமியை சுற்றிவர இருக்கின்றனர். இது சர்வதேச விண்வெளி நிலையத்தை விட 160 கிமீ அதிக உயரம் என்பது குறிப்பிடத்தக்கது.

  திட்டமிட்ட இலக்கை அடைந்த டிராகன் விண்கலம் பூமியை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதில் பூமி சுழலும் காட்சிகள் பதிவாகியுள்ளன. டிராகன் விண்கலத்தில் மூன்று நாட்கள் பயணிக்கும் இந்த குழுவினர், சனிக்கிழமையன்று ஃப்ளோரிடா கடற்பகுதியில் தரையிறங்குகின்றனர். இன்ஸ்பிரேஷன் 4 பயணத்தின் மூலம் விண்வெளிச் சுற்றுலாவின் புதிய கதவுகளை திறந்திருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அடுத்த கட்டமாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் களமிறங்கவுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Space, Spacecraft, Tour