ஹோம் /நியூஸ் /உலகம் /

ஒரு மணி நேர கரண்ட் கட் ஆனா தவிக்கிறோமே... மின்சார வசதியின்றி மக்கள் வாழும் நாடு பற்றி தெரியுமா?

ஒரு மணி நேர கரண்ட் கட் ஆனா தவிக்கிறோமே... மின்சார வசதியின்றி மக்கள் வாழும் நாடு பற்றி தெரியுமா?

Image Courtesy: UN news

Image Courtesy: UN news

Country Without Electricity: வடகிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு கோடியே 12 லட்சம் பேர் வசிக்கக் கூடிய தெற்கு சூடான் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் மின் வசதி கிடைக்கவில்லை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நாடு முழுவதும் வறுத்தெடுக்கும் கோடை வெயிலால் தவிக்கும் மக்களுக்கு திடீர் மின்வெட்டுகள் கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளன. பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில இடங்களில் 8 மணி நேர மின்வெட்டு நிலவும் நிலையில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஒரு மணி நேர, இரண்டு மணி நேர மின்வெட்டுக்கே மக்கள் தாக்குபிடிக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

  ஆனால், 21 ஆம் நூற்றாண்டிலும் மக்கள் தொகையில் ஜம்மு காஷ்மீரை விட குறைவாக அதாவது சுமார் ஒரு நாட்டின் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடப்பதுதான் வினோதம். ஆம். வடகிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு கோடியே 12 லட்சம் பேர் வசிக்கக் கூடிய தெற்கு சூடான் நாட்டில்தான் இந்த அவலம். அங்கு வெறும் 6.7 சதவீத மக்களுக்கே மின்சார வசதி கிடைத்திருக்கிறது. அந்நாட்டில் 80 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலேயே வசித்து வரும் நிலையில்,அவர்களுக்கு மின்சார வசதி எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால், இந்த நவீன யுகத்திலும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்நாளில் மின்விளக்கையே பார்க்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

  இதையும் படிங்க: உலக பூமி தினத்தன்று 4 சிறப்பு டூடுல்களை வெளியிட்ட கூகுள் நிறுவனம்!

  சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருங்கிணைந்த சூடானாக இருந்தபோதே தெற்கு சூடான் பகுதியில் மின் உற்பத்தி திறன் போதிய அளவில் இல்லாமல் இருந்து வந்தது. 2013 முதல் 2020 -ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு போரில் ஏற்கெனவே இருந்த சொற்ப மின் உற்பத்தி கட்டுமானமும் சேதமடைந்ததால் மின் உற்பத்தி வெகுவாக வீழ்ச்சி கண்டது. தெற்கு சூடானின் ஒட்டுமொத்த மின் தேவையே தமிழகத்தின் நீலகிரி மாவட்ட மின் நிலையங்களில், தற்போதைய மின் உற்பத்தி அளவான 350 மெகாவாட்டை விட குறைவாக அதாவது 300 மெகாவாட்டாக மட்டுமே உள்ளது. ,

  இதனால், தெற்கு சூடானின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேருக்கே மின் நிலையங்கள் மூலம் மின்சார விநியோகம் செய்ய முடிகிறது. 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மின் நிலையங்கள் மூலம் தெற்கு சூடான் நாட்டில் வெறும் 30 ஆயிரம் நுகர்வோர்களே மின் இணைப்பை பெற்றிருந்தனர். மின்சார வாரியத்தின் சார்பில் நீர்மின் நிலையங்கள், டீசல் ஜெனரேட்டர்கள், சோலார் பேனல் மூலம் சுமார் 200 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. வசதிபடைத்த மக்கள் சோலார் பேனல் மற்றும் ஜெனரேட்டர்கள் மூலம் தனியாகவே மின்சாரம் உற்பத்தி செய்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

  மின் உற்பத்தி குறைவாக இருக்கும் சூழலில் மின்சார கட்டணமோ உலகிலேயே அதிக அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நம்ம ஊரில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் நிலையில், தெற்கு சூடானில் ஒரு யூனிட் மின்சார பயன்பாட்டிற்கு 27 ரூபாய் 55 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சார வசதியே சென்றடையாததால் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 முதல் 12 சதவீதம் பேரிடமே செல்போன் உள்ளது. மின்சார வசதி இல்லாத கிராமங்களில் செல்போன் பயன்படுத்துபவர்களின் நிலைமையோ மேலும் ஆச்சரியத்தை வரவைக்கிறது.

  நீலகிரி போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கு பொது சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு வரும் சூழலில், தெற்கு சூடானில் கிராமப்புறங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக செல்போன் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நம் ஊரில் குடிநீர் பிடிக்க மக்கள் செல்வதை போன்று அங்கு வசிக்கும் மக்கள் சர்வசாதாரணமாக 10, 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சார்ஜிங் மையங்களுக்கு சென்று செல்போனை சார்ஜ் செய்கின்றனர்.

  இதையும் படிங்க: லேப்டாப் இல்லாததால் பாகிஸ்தான் பிரதமர் செய்தியை கவர் செய்யாத டிவி சேனல் - 17 அலுவலர்கள் சஸ்பென்ட்

  இந்நிலையில், தெற்கு சூடானின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அண்டை நாடான எத்தியோபியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. தெற்கு சூடானுக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்கான கட்டமைப்பை உருவாக்கவும் எத்தியோபியா முன்வந்துள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே நம்பிக்கை கீற்றை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சொல்லவா வேண்டும்?

  Published by:Kannan V
  First published:

  Tags: Africa, Power cut