Home /News /international /

உலகின் முதல் மிதக்கும் தற்சாற்பு நகரம் - 5 லட்சம் சதுரமீட்டரில் கடலில் ஒரு பிரம்மாண்டம்

உலகின் முதல் மிதக்கும் தற்சாற்பு நகரம் - 5 லட்சம் சதுரமீட்டரில் கடலில் ஒரு பிரம்மாண்டம்

Floating City

Floating City

சோலார் பேனல்களின் மூலம் மின்சார உற்பத்தியும், பண்டைய விவசாய முறைகளுடன் சேர்த்து நவீன ஏரோபோனிக் மற்றும் அக்வாபோனிக் அமைப்புகள் மூலம் விவசாயம் செய்து உணவுத் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிலான 10,000 பேர் வசிக்கக் கூடிய உலகின் முதல் தற்சாற்பு நகரம் வரும் 2025ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல்மட்டம் உயரும் பாதிப்புள்ள நகரங்கள் பலனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாறிவரும் காலசூழ்நிலைகளால் பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. காடுகள் பரப்பளவு குறைவது, பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் உயர்வு, வறட்சி, வெள்ளம் போன்றவை பருவநிலை மாற்றத்தில் பாதிப்புகளாகும். பருவநிலை மாற்றம் என்பது எதிர்கால பிரச்னை அல்ல, அது நிகழ்கால பிரச்னை என்பது அவ்வப்போது ஏற்பட்டு வரும் வெள்ளம் மற்றும் வறட்சியில் இருந்து புரிந்துகொள்ள முடியும். இந்த பிரச்னையை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாகிறது. அதே நேரத்தில் பருவநிலை மாற்ற பிரச்னைகளை களைந்து மாற்று முறை வாழ்வியல் குறித்த ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் பருவநிலை மாற்றத்தின் மிக முக்கிய பாதிப்புகளில் ஒன்றாக இருக்கும் கடல்நீர்மட்டம் உயருதலை, கடற்கரையோர நகரங்கள் சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவில் கடல்நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கடற்கரையோர நகரங்களில் நீர் உட்புகுந்து விரைவில் பெரும் பிரச்னைகளை சந்திக்க இருக்கிறோம். பருவநிலை மாற்றத்தால் சென்னை நகருக்கும் ஆபத்து இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது.

Also read:  Netflix வெப்சீரிஸ் தொடர் பார்த்த வடகொரிய மாணவருக்கு ஆயுள் தண்டனை; ஒருவருக்கு மரண தண்டனை

இதனிடையே கடற்கரையோர நகரங்களுக்கு அருகே மிதக்கும் நகரங்களை அமைக்க கடந்த 2019ம் ஆண்டு யோசனை கூறப்பட்டது. அது தற்போது செயல்வடிவம் பெற்றிருக்கிறது. ஆம் தென் கொரியாவின் பூசான் நகர் கடற்பரப்பில் உலகின் முதல் தற்சாற்பு மிதக்கும் நகரம் கட்டமைக்கப்பட இருக்கிறது.

floating city south korea


5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், 200 மில்லியன் டாலர்கள் பொருட்செலவில், 10 ஆயிரம் பேர் வசிக்கக் கூடிய வகையில், மிதக்கும் நகரத்தை வரும் 2025ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.நா மன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தினை Oceanix என்ற நிறுவனம் கட்டமைக்க இருக்கிறது. இதற்காக ஓசியானிக்ஸ் நிறுவனத்துக்கும், பூசான் நகர நிர்வாகத்துக்கும் இடையே கடந்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

floating city south korea
floating city south korea


மின்சாரம், உணவு, குடிநீர் என அனைத்துமே சுயமாக தற்சாற்பு முறையில் பூர்த்தியாகும் வகையில் இந்த நகரம் கட்டமைக்கப்பட இருக்கிறது. சோலார் பேனல்களின் மூலம் மின்சார உற்பத்தியும், பண்டைய விவசாய முறைகளுடன் சேர்த்து நவீன ஏரோபோனிக் மற்றும் அக்வாபோனிக் அமைப்புகள் மூலம் விவசாயம் செய்து உணவுத் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Also read:   குழந்தையின் உயிர்காக்க விஞ்ஞானியாக மாறிய தந்தை.. பள்ளிப்படிப்பை தாண்டாதவர் வீட்டிலேயே மருந்து தயாரித்து அசத்தல்..

மேலும் கடல்நீரை குடிநீராக மாற்றும் அமைப்பு மூலம் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும். hexagonal platforms (அறுகோண தளங்கள்) வடிவில் தீவுக் கூட்டம் போல செயற்கையாக உருவாக்கப்படும், இதன் மீது லைம் கற்கள், விரைவாக வளரும் மூங்கிள்கள் என அப்பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீடுகள் கட்டுமானம் செய்யப்படும், இந்த வீடுகளின் கீழ் இரும்பு கம்பிகளால் நிறுவப்படும் அமைப்புகளின் மூலம் மீன்கள் உள்ளிட்ட கடல் உணவுகள் செயற்கையாக வளர்க்கப்படும். மேலும் பவளப்பாறைகளும் நிறுவப்படும்.

2025ஆம் ஆண்டு பூசான் நகர் அருகே இந்த மிதக்கும் நகரம் கட்டி முடிக்கப்படும் எனவும் இதில் வசிப்பவர்கள் யார் யார் என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பூசான் தவிர்த்து மேலும் 10 கடலோர நகர நிர்வாகங்களிடமும் மிதக்கும் நகரங்கள் கட்டமைப்பது குறித்து ஓசியானிக்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Climate change, Climate Change Projects, South Korea

அடுத்த செய்தி