தென் கொரியாவில் கோவிட்-19 தினசரி பாதிப்பு ஒரு லட்சத்துக்கு மேல் இருந்தாலும் லாக்டவுனில் தளர்வு கொண்டுவர அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
தென் கொரியா நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 846 பேருக்கு புதிதாக கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 4 லட்சத்து 869ஆக உயர்ந்துள்ளது.
அந்நாட்டில் மார்ச் மாத மத்தியில் கோவிட்-19 மூன்றாம் அலை உச்சமடையத் தொடங்கியது. இதன் காரணமாக 10 நாள்களுக்கு முன் தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்தை தாண்டியது. முதலில் தலைநகர் சியோல், இன்செயான், கெயாங்கி போன்ற மெட்ரோ நகர்களில் பாதிப்பு அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது ஊரகப் பகுதிகளிலும் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தொற்று அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தலைநகர் சியோலில் மட்டும் புதிதாக 21,450 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் உள்ளவர்களில் சுமார் ஆயிரம் பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அந்நாட்டின் நாட்டின் மொத்த பாதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருந்தாலும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 20,616 ஆக மட்டுமே உள்ளது. மேலும், தென் கொரியா தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதுவரை 86.8 சதவீதத்தினர் இரண்டு டோஸ் தடுப்பூசியும், 64.3 சதவீதத்தினர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
also read : உயரமான கட்டிடத்திலிருந்து குதிக்கும் பெண்ணை இப்படி மட்டும் காப்பாத்துலன்னா அவ்ளோ தான்..
தினசரி பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் மேல் இருந்தாலும், கடந்த பத்து நாள்களாக நிலைமை சீராகி வருவதால் லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்த தென் கொரிய அரசு முடிவெடுத்துள்ளது. முகக்கவசத்தை மட்டும் கட்டாயமாக வைத்து மற்ற கட்டுபாடுகளுக்கு தளர்வு கொண்டு வர தென் கொரிய அரசு முடிவெடுத்துள்ளது.
தென் கொரியாவை போல் ஆஸ்திரேலியாவிலும் கோவிட்-19 பாதிப்பு புதிய அலை தீவிரமாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் மேல் உள்ள நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. அந்நாட்டில் 69 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர்.
சீனாவிலும் புதிய கோவிட் அலையின் தாக்கம் அந்நாட்டு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக, அங்குள்ள ஷாங்காய் மாகாணத்தில் தினசரி பாதிப்பு 27,000ஐ தாண்டியுள்ளது. அங்கு முழு லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் மக்கள் அத்தியாவசி தேவைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குவாரெண்டைன் மையங்களில் போதிய வசதி இல்லாததால் அங்கு சிகிச்சையில் உள்ள நபர்கள் அமைதி இழந்து கோபத்தின் உச்சத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.