இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிங்கப்பூர் அரசு இன்று முதல் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பித்து வைரஸ் சங்கிலித் தொடரை தகர்த்ததுடன் வைரஸ் தொற்றை மேலும் பரவாமல் தடுத்தது. இதனையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியது.
இருப்பினும் கடந்த ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து நாடுகளில் உருமாறிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இவை முந்தைய கொரோனா பரவலை காட்டிலும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. B.1.617 என பெயரிடப்பட்ட இந்த வகை கொரோனா வைரஸால் இந்தியாவில் கொரானா பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டது. இது முந்தைய அலையைக் காட்டிலும் பல மடங்கு பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. இந்தியாவில் பரவிய கொரோனாவால் உலக நாடுகள் இந்தியாவுக்கு பயணத் தடை விதித்தன.
இந்நிலையில் இந்தியாவுடன் வணிகம், தொழில் ரீதியில் நல்ல தொடர்பை கொண்டுள்ள சிங்கப்பூரில் இந்திய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இல்லாத வகையில் அங்கு 8 மாதங்களில் முதல் முறையாக ஒரே நாளில் 38 பேருக்கு உள்ளூர் பரிமாற்ற முறையில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒரே டியூசன் செண்டரில் படித்த குழந்தைகள் பலருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கக்கூடியதாக இருக்கும் இந்த கொரோனாவானது இந்தியாவில் முதல் முதலில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா என தெரியவந்தது.
இதனையடுத்து சிங்கப்பூரில் இன்று முதல் மே 28ம் தேதி வரை தொடக்க நிலை மற்றும் ஜூனியர் காலேஜ் பள்ளிகளை மூட வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. வீட்டிலேயே இருந்து வகுப்புகளை ஆன்லைன் மூலமாக தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் Ong Ye Kung கூறுகையில், சிங்கப்பூரில் பெரும்பாலானோரிடம் கண்டறியப்பட்டுள்ள இந்திய வகை கொரோனா குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. இது மிகவும் கவலைதரக்கூடியதாக உள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாருக்கும் தீவிர பாதிப்பு கிடையாது. 16 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை அரசு ஆலோசித்து வருகிறது. என தெரிவித்துள்ளார்.
Read More: ஒற்றை ட்வீட்டால் ஏற்பட்ட சங்கடம்: அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தால் கொந்தளித்த சிங்கப்பூர் அரசு!
சிங்கப்பூரில் இதுவரை மொத்தமாக 2,000க்கும் கூடுதலான நபர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்நாடு தீவிர நடவடிக்கைகளின் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளது.
இதே போல தைவான் தலைநகர் தைபேயிலும் மே 28ம் தேதி வரை பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, COVID-19 Second Wave, School, Singapore