சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கியுள்ளதால், அங்குள்ள சுமார் 2.6 கோடி மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
உலகளவில் கொரோனா பெருந்தொற்று தாக்கம் தற்போது ஓய்ந்துள்ள நிலையில், சீனாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் முக்கிய பொருளாதார மையமாகக் கருதப்படும் ஷாங்காய் மாகாணத்தில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாகாணத்தில் உள்ள சுமார் 2.6 கோடி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கியுள்ளனர்.
அங்குள்ள சூப்பர் மார்கெட் மற்றும் சந்தைகள் முற்றாக மூடப்பட்டுள்ளன. அத்துடன் அடிப்படை பொருள்களின் விநியோகமும் தடைப்பட்டுள்ளதால் மக்கள் உணவின்றி சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஷாங்காய் வர்த்தக ஆணையத்தின் துணைத் தலைவர் லியு மின் கூறுகையில், "மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருள்கள் மற்றும் அவசர சேவைகளை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பது சவாலான காரியம். இதற்காக சுமார் 11,000 டெலிவரி பணியாளர்களை அரசு பணியமர்த்த உள்ளது. இந்த தினசரி கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.
ஷாங்காய் நகரில் நேற்று ஒரே நாளில் 16,766 பேருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் காரணமாக சுமார் 20 கோடி மக்கள் லாக்டவுனில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அந்நாட்டின் சேவை மற்றும் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.இது அந்நாட்டிற்கும் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2020ஆம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்று முதல்முதலாக சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கோவிட் பரவல் இதுவாகும். இதை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 38,000 மருத்துவ பணியாளர்களையும், 2,000 ராணுவ வீரர்களையும் ஷாங்காய் மாகாணத்தில் அந்நாட்டு அரசு களமிறக்கியுள்ளது.
ஷாங்காயில் உள்ள அனைத்து மக்களுக்கு விரைந்து பரிசோதனை மேற்கொண்டு, அறிகுறி இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டவர்களை மட்டும் வீட்டு தனிமையில் வைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.அறிகுறி கொண்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மாபெரும் குவாரெண்டைன் மையங்களை சீனா அரசு உருவாக்கி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.