சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுபவர்களுக்கு பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்துவதில் அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் முதல்கட்ட வெற்றியைப் பெற்றுள்ளனர்.
உலகளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக கோடிக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அதில் 90 விழுக்காட்டினர் சிறுநீரக செயலிழப்பை எதிர்கொண்டு, மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையை போக்க மருத்துவ உலகம் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதில், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ குழு ஒன்று முதல் கட்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அவர்கள், மூளைச் சாவு அடைந்த பெண் ஒருவருக்கு, ஜீன்கள் மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.
பொதுவாக, உடனடியாக மாற்று உறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமை, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினைகள் இந்த ஆய்வின்போது வெளிப்படவில்லை என்பதால், ஆய்வாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், மனிதர்களுக்கு விலங்குகளின் கிட்னியை பொருத்தவதில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளுக்கு கிடைத்த வெற்றியின் முதல்படி எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க் நகரில் உள்ள NYU லாங்கோன் ஹெல்த் மருத்துவமனையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, மூளைச்சாவு மற்றும் சிறுநீரக செயழலிழப்பு அடைந்த பெண்ணின் குடும்பத்தினரிடம், புதிய ஆய்வுக்காக மருத்துவர்கள் ஒப்புதலை பெற்றுள்ளனர். குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு பெண்ணின் உடலுக்கு வெளிப்புறத்தில் ரத்தக் குழாய்களுடன் ஜீன் மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் கிட்னியை பொருத்தியுள்ளனர். 3 நாட்களுக்கு எந்தவிதமான எதிர்வினைகளும் இல்லை. எப்போதும் போல் இயல்பாக சிறுநீரகம் இயங்கியதாக ஆய்வில் ஈடுப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மாண்ட்கோமேரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசும்போது, "மாற்று சிறுநீரகங்களை பொருத்தும்போது உடனடி நிராகரிப்புகள் இருக்கும், எதிர்வினைகளை பார்க்க நேரிடும். ஆனால், இந்தமுறையில் அந்தமாதிரியான எந்த எதிர்வினைகளும் உடனடியாக எழவில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணின் கிரியேட்டினின் நிலை, பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது" எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, தற்போதைய நிலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். சுமார் 3 முதல் 4 ஆண்டுகளாக காத்திருப்பவர்கள் ஏராளம். மாற்று உறுப்புக்காக காத்திருப்பவர்களில் 90,000 க்கும் மேற்பட்டோர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்துள்ளனர். இத்தகைய நெடுநாள் காத்திருப்புக்கு முடிவுகட்டும் விதமாக மருத்துவ உலகைச் சேர்ந்த நிபுணர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பு மாற்று ஆய்வில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
மனிதர்களில் விலங்குகளின் உறுப்புகளை சேர்க்கும்போது, உடனடியாக நிராகரிப்பதை எவ்வாறு தடுப்பது என குழப்பத்தில் இருந்தனர். இதற்கு ஜீன் மாற்றம் கைகொடுக்குமா? என்ற ஆய்வில் இறங்கினர். அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகமும் மருத்துவத்துறைக்கான ஆய்வுக்கு அனுமதி கொடுத்தது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. மனிதர்களின் இதயம் மற்றும் தோல் மாற்று அறுவை சிகிச்சை முதல் சிறுநீரகம் மாற்று வரை ஜீன்கள் மாற்றம் செய்யப்பட்ட கால்சேஃப் பன்றிகளை பயன்படுத்தலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், ஒவ்வொரு ஆய்வுக்கும் அமெரிக்க மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு கழகத்தின் அனுமதி கட்டாயம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிய வழி ஒன்றை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், அடுத்தடுத்த ஆய்வு இன்னும் பல முடிச்சுகளை அவிழ்க்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இறைச்சி ஒவ்வாமை உள்ளவர்கள், புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கும், இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாகவும் ஆய்வாளர் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மாண்ட்கோமெரி கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.